கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி எதிராக இதுவரை 51 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குருநாகல் வைத்தியசாலை அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த வைத்தியருக்கு எதிராக 15 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகள் அனைத்தும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து வைத்தியர் ஷிஹாப்தீன் சாஃபி கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
40 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத குழு அவருக்கு வழங்கியதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் சாஃபியின் பெயரிலுள்ள 17 காணி உறுதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் குருநாகலை சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

