பயங்கரவாத செயற்பாடுகளை போசிப்பதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கம் துணைபோயுள்ளது. அத்துடன் இந்த சந்தர்ப்பத்தை வைத்து சர்வதேச தலையீடுகளுக்கான வாய்ப்பையும் அரசாங்கமே உருவாக்கிக்கொடுக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்கத்தை காப்பாற்ற ராஜபக்ஷ அணியினர் முயற்சிப்பதாவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. அத்துடன் எமது கடன் தொகையும் அதிகரித்தே சென்றுள்ளது. நாளுக்கு நாள் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஒருபுறம் கடன், இன்னொருபுறம் பயங்கரவாதம் என நாடு நாசமாக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தும் கூட அரசாங்கம் அநாவசிய செலவுகளை கட்டுபடுத்தாது நிகழ்வுகளை நடத்த கோடிக்கணக்கான நிதியை ஒதுக்குகின்றது. சமுர்த்தி வழங்குவதாக கூறி கோடிக்கணக்கான நிதியை அநாவசியமாக செலவழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது. இதனால் மீண்டும் பாரிய கடன் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு சமுர்த்தி வழங்குவது வேறு எதற்காகவும் அல்ல, தமது தேர்தல் நகர்வுகளை இலக்கு வைத்தே இதனை செய்வதாக அவர்களே கூறுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் அவர்களே கூறுகின்றனர். உதவிகள் கூட கட்சி பேதம் பார்த்தே இவர்கள் செய்கின்றனர்.
மேலும் இன்று தெரிவுக்குழு குறித்து அதிகமாக பேசுகின்றனர். நம்பிக்கையில்லா பிரேரணை என்பதும் தெரிவுக் குழு என்பதும் வெவ்வேறு காரணிகள். இது இரண்டையும் ஒன்றாக கையாள முடியாது.
21 ஆம் திகதி சம்பவம் குறித்து ஆராயவே தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இதில் கொண்டுவந்து அவரை நியாயப்படுத்த முடியாது என்பதை நாம் தெளிவாக கூறியுள்ளோம்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் கொண்டுவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தில் உள்ள அனைவர் மீதும் நம்பிக்கையில்லை என்பதே எமது நிலைப்பாடு.
எவ்வாறு இருப்பினும் நாம் கொண்டுவரும் பிரேரணைக்கு முன்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே அதனை முதலில் விவாதத்திற்கு எடுத்துகொள்ள வேண்டும்.
கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தடுக்கப்பட பல வாய்ப்புகள் இருந்தும் அரசாங்கம் அதனை கருத்தில் கொள்ளவில்லை, தாக்குதலின் பின்னரும் நாட்டில் இனவாத தாக்குதல்கள் இடம்பெற அரசாங்கமே துணைபோயுள்ளது.
பிரதமர் ஜனாதிபதி இருவரும் தமது கடமையை செய்யாதிருந்தமை. இந்த அரசாங்கம் நேரடியாக மற்றும் மறைமுகமாக பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோயுள்ளனர். அதேபோல் சர்வதேச தலையீடுகளும் இதில் காணப்பட்டுள்ளது. இதற்கும் அரசாங்கம் இடம் கொடுத்துள்ளது. நாம் ஆதாரபூர்வமாக காரணிகளை முன்வைத்துள்ளோம்.
உண்மையில் இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய நோக்கம் ராஜபக்ஷவின் எதிர்க்கட்சிகே உள்ளது. இவர்கள் அரசாங்கத்தை காப்பாற்ற அமைச்சர் ஒருவருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். நாம் மாறாக இந்த அரசாங்கத்தை எதிர்த்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளோம்.
எமக்குள்ள ஒரே நோக்கம் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமே. அதற்கான நடவடிக்கையையே முன்னெடுக்க நாம் முயற்சிக்கின்றோம். அதோபோல் இன்று இனவாத கருத்துக்கள் ஊடகங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம்கள் குறித்த இனவாத கருத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகின்றது.
உண்மையாக குற்றவாளிகள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்த பயங்கரவாத செயற்பாட்டில் சகல கட்சிகளிலும் இவர்களின் உள்நுழைவு இருந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி என அனைத்து கட்சிகளிலும் உள்ள நபர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
ஆகவே இந்த பயங்கரவாதம் சாதாரண ஒன்றல்ல என்பதை நினைவில் வைத்துகொண்டு கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து இதனை ஒத்துழைப்பு வழங்கி பயங்கரவதத்தை தடுக்க வேண்டும் என்றார்.