எமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது?

812 0

மூப்பத்தெட்டு ஆண்டுகள் ஓடி உருண்டு விட்டாலும் அன்று இட்ட தீயின் புகை கண்களை இன்றும் எரிய வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்தை இல்லாது அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் மிகச்சாதுரியமாக திட்டமிட்டு வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழ் இனத்தை அழிக்க நினைத்ததின் ஆழமான பொறி யாழ்ப்பாணம் பொது நூலகத்தை தீக்கிரையாக்கியது.

தமிழ் இனத்தின் தற்காப்பு அரணாக கல்வி விளங்கியது. அந்த அரணை தகர்ப்பதன் மூலம் தமிழரை அழிக்க முடியும் என சிங்கள ஏகாதிபத்திய அரசு நம்பியது.

கல்வி தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களை திட்டமிட்டு பின்தள்ளிய சிறிலங்கா அரச பயங்கரவாதம் . தொடர் நடவடிக்கையாக தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த தமிழர்களின் அறிவுச்சுரங்கத்தை எரித்தழித்து தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியது.

இது உலகின் 20 ஆம் நூற்றாண்டின் பொது நூலக அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாக இன்று வரை வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.  97,000 வரையான அரிய நூல்கள் எரிந்து சாம்பலாகின.

தற்போது யாழ். நூலகம் புணரமைக்கப்பட்டு புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெற முடியவில்லை என்பது தமிழ் இனத்திற்கு பேரிழப்பே.

தமிழ் இன விடுதலைப் போராட்த்தை சிறிலங்கா அரசாங்கம் மட்டுமல்ல பல வல்லரசுகளும் இணைந்து நசுக்கி அழித்து விட்டன.

சிங்கள ஏகாதிபத்தியம் தமிழர்கள் மீது திணித்த கல்வி தரப்படுத்தல் மூலம் இனவிடுதலைப் போராட்டம் பிறப்பெடுத்தது. . அறிவுப்பொக்கிசமான யாழ்.நூலகத்தில் எரியூட்டப்பட்ட அந்த தீயின் பிளம்பு தமிழரின்
இன விடுதலையை வீறுகொண்டெழ வைத்தது.

எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் தழிழர்களை அழிக்க முனைந்தார்களோ அதன் மூலமே தக்க பதில் அடி கொடுக்க வேண்டும்.

அறிவே உலகை ஆளும். தாயகத்தில் உள்ள இளைய தலைமுறைகள் அறிவால் தம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்கள் எம் இனம் பட்ட துன்பங்களை சொல்லி பிள்ளைகளை அறிவூட்ட வேண்டும்.

புலத்தில் உள்ளோர் தமது தாயகம் நோக்கிய பயணத்திற்கு இளையோரை மிகப் பெரும் புத்திஜீவிகளாகவும் தேசப்பற்றாளர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்.

புலத்தில் இளையயோர்களை அறிவால் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகள் பல  பரந்து கிடக்கின்றன. அவற்றை பின்பற்றி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அந்த வளர்ச்சியே எமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் ஆகும்.