தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி முன்னிலை

125 0

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தூத்துக்குடி தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.ம.மு.க. சார்பில் வக்கீல் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியில் மொத்தம் 14,25,401 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,77,393 ஆண் வாக்காளர்களும், 5,06,578 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 28 பேர் என மொத்தம் 9,83,999 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இது 69.03 சதவீத வாக்குப்பதிவாகும்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் தபால் ஓட்டுகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 3 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலையில் இருந்து வந்தார்.