இலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்!

151 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் உள்ளூர் தீவி­ர­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்­டது. அது ஐ.எஸ்.­ஐ.எஸ். என்ற உலக பயங்­க­ர­வாத அமைப்­பினால் வழி­ந­டத்­தப்­பட்­டது. பொலிஸ் விசா­ர­ணை­களில் இது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உள்ளூர் தீவி­ர­வாத அமைப்­பி­னரே பயங்­க­ர­மான தற்­கொலைக்குண்டுத் தாக்­கு­தல்­களை நன்கு திட்­ட­மிட்ட வகையில் நடத்தி அப்­பா­வி­க­ளான 250க்கும் மேற்­பட்­ட­வர்­களைக் கொன்­றொ­ழித்­த­துடன், 500க்கும் மேற்­பட்­ட­வர்­களை காய­ம­டையச் செய்­துள்­ளனர்.

தேவா­ல­யங்­க­ளிலும் நட்சத்திர ஹோட்­டல்­க­ளிலும் நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் உள்­ள­வர்­களைத் தேடிக்கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்­கைகள் முழு வீச்சில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள போதிலும், அந்தத் தேடு­தல்­களின் மூலம் உள்ளூர் தீவி­ர­வா­தி­க­ளான பயங்­க­ர­வா­திகள் முழு­மை­யாகக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றார்­களா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று ஒரு  ­மாதம் கடந்­து­விட்­டது. ஆனால், அந்தத் தாக்­கு­தல்­க­ளி­னாலும், அதன் பின்­ வி­ளை­வு­க­ளி­னாலும் ஏற்­பட்ட குழப்ப நிலை­மையும், கவ­லை­களும் இன்னும் முடி­வுக்கு வர­வில்லை. தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் கோரம் குறித்த அச்சம் மக்கள் மனங்­களிலிருந்து இன்னும் அக­ல­வில்லை. இந்த அச்சம் கார­ண­மாக நாடு இயல்பு வாழ்க்­கைக்குத் திரும்­பு­வது கடி­ன­மான காரி­ய­மாகியுள்­ளது.

தேசிய பாது­காப்­பையும், பிராந்­திய பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்ற கார­ணத்தைக்காட்டி, உலக வல்­ல­ர­சுகள் இலங்­கையில் கால் பதிப்­ப­தற்கு உலக பயங்­க­ர­வா­த­மா­கிய இந்த தற்­கொலைக்குண்டுத் தாக்­கு­தல்கள் உரிய வாய்ப்பை ஏற்­ப­டுத்தியிருக்­கின்­றன.

தென்­னா­சிய பிராந்­தி­யத்தில் இரா­ணுவ பொரு­ளா­தார வல்­ல­மையை வளப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான போட்­டியில் சீனாவும், அமெ­ரிக்­காவும் வரிந்து கட்­டிக்­கொண்டு களத்தில் இறங்­கி­யி­ருக்­கின்­றன. அந்த போட்டிச் செயற்­பா­டு­களின் ஓர் அம்­ச­மா­கவும், புதிய நகர்­வா­கவும் அந்த இரண்டு நாடு­க­ளுமே இலங்­கையில் ஒரு பாது­காப்புத் தளத்தை – ஒரு பாது­காப்பு நிலையை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. அதற்­கான பூர்­வாங்க ஒப்­பந்த நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக ஊடகத் தக­வல்கள் கூறு­கின்­றன.

ஏட்­டிக்குப் போட்­டி­யாகச் செயற்­ப­டு­கின்ற வல்­ல­ர­சு­க­ளான அமெ­ரிக்­காவும், சீனாவும் இந்த சின்­னஞ்­சி­றிய தீவில் நிலை­கொள்­வதன் மூலம், இரு தரப்­பு­க­ளுக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பாட்டு நிலைகள், முரண்­பா­டான செயற்­பாடுகள் என்­பன இங்கு இடம்­பெ­றும் அதன் ஊடாக பிராந்­தி­யத்தில் பதற்றத்தை உரு­வாக்­க­வல்ல உணர்வு நிலையின் உற்­பத்தித் தள­மாக இலங்கை மாற்­ற­ம­டை­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உண்டு.

இது நீண்­ட­கால அடிப்­ப­டையில் இலங்கை மக்­களின் நிம்­ம­தி­யையும் வளர்ச்சிப் போக்­கி­லான அவர்­க­ளு­டைய எதிர்­கால வாழ்க்­கை­யையும் அச்­சு­றுத்­த­லுக்குள்­ளாக்க வல்­லது. மொத்­தத்தில் உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் பிராந்­திய வல்­லா­திக்க போட்­டிக்குள் இலங்­கையை வலிந்து இழுத்துச் சென்­றி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. ஜன­நா­யக நாடா­கிய இலங்­கைக்கு இந்த நிலைமை மிகவும் ஆபத்­தா­னது என அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுதப் போராட்­டத்தை பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரித்து, அதனை உலக பயங்­க­ர­வா­த­மாக உரு­வ­கித்துக்காட்டி, அந்தப் பயங்­க­ர­வா­தத்­தையே அடித்து நொறுக்கி இல்­லாமல் செய்­து­விட்­ட­தாக இலங்கை அரசு இன்னும் வீரம் பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அத்­த­கைய வீர­தீர அனு­ப­வத்தைக்கொண்ட அர­சாங்­கத்­தி­னாலும், அத­னு­டைய படை­க­ளி­னாலும், குறிப்­பாக புல­னாய்வு பிரி­வி­ன­ராலும் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்­கொலைக்  குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் தடுத்து நிறுத்த முடி­யாமல் போய்­விட்­டது.

இந்தத் தாக்­கு­தல்கள் குறித்த எச்­ச­ரிக்கைத் தக­வல்கள் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு முன்­கூட்­டியே ஒன்­றுக்கும் மேற்­பட்ட தட­வை­களில் கிடைத்­தி­ருந்தபோதிலும், அந்தத் தாக்­கு­தல்­களைத் தடுக்­கவோ அல்­லது அந்தத் தாக்­கு­தல்­களின் சேத அள­வு­களைக் குறைக்­கவோ முடி­யாத மோச­மான தோல்­விக்கு இந்த ‘பயங்­க­ர­வாத எதிர்ப்பு வீரம்’ ஆளாகி விட்­டது. இது பல்­வேறு தரப்­பி­ன­ரதும் கண்­ட­னத்­திற்கும், அந்த ‘பயங்­க­ர­வாத எதிர்ப்பு வீரத்தை’ கேள்­விக்­கு­றி­யோடு நோக்­கு­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்தி உள்­ளது.

தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் பற்­றிய முன்­னெச்­ச­ரிக்­கைக்கு முன்பே நாட்டில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் வன்­முறை நோக்கில் வளர்ச்சி பெற்று வரு­வது பற்­றிய தக­வல்கள் அர­சாங்­கத்­திற்கும், அரச காவல்­து­றைக்கும், புல­னாய்வு பிரி­வுக்கும் தாரா­ள­மாகக் கிடைத்­தி­ருந்­தன. இந்தத் தக­வல்­களை மித­வாத முஸ்லிம் அமைப்­புக்­களும் முக்­கி­யஸ்­தர்­களும் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தி­ருந்­த­தாக விரல் நீட்டி உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

ஆனால், இந்த எச்­ச­ரிக்­கைகள் எல்­லா­வற்­றை­யுமே காவல்­து­றை­யி­னரும், புல­னாய்வுப் பிரி­வி­னரும், ஆட்­சி­யா­ளர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் உதா­சீனம் செய்­தி­ருந்­த­தையே காண முடி­கின்­றது. அந்த உதா­சீனம் குறித்தும், பொறுப்­பற்ற தன்மை குறித்தும் அவர்கள் மீது இப்­போது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்தத் தோல்வி நிலை­மைக்கு இது­வ­ரை­யிலும் அர­சாங்கத் தரப்பிலிருந்து உளப்­பூர்­வ­மான பொறுப்­பேற்கும் பண்பு வெளிப்­ப­டவே இல்லை.

என்ன நடந்­தது?

உள்ளூர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை துணி­க­ர­மாக நடத்­தி­யி­ருந்­தார்கள். அதுவும் இந்த இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வாத கருத்­தி­ய­லுக்குள் மூழ்கிப் போன விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சில முஸ்லிம் குடும்­பங்­களே இந்தத் தாக்­கு­தல்­களில் நேர­டி­யாகப் பங்­கேற்­றி­ருந்­தார்கள். இது விசா­ர­ணை­களின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் உள்ளூர் தலை­ம­க­னா­கிய மௌலவி சஹ்ரான் ஹாசிம், தனது தலை­மை­யி­லான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற தீவி­ர­வாத அமைப்பின் ஊடாக  இந்தத் தாக்­கு­தல்களை நெறிப்­ப­டுத்தியிருந்­த­தா­கவும் தகவல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

மூன்று தசாப்­தங்­க­ளாக நீடித்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும், அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்தம் 2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் கிழக்கு மாகா­ணத்தில் படிப்­ப­டி­யாக வளர்ச்சி பெற்­றி­ருந்­தது. இதனை இஸ்­லா­மிய மித­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்­களும், இஸ்­லா­மிய மதத் தலை­வர்­களும் விலா­வா­ரி­யாக விப­ரித்துக் கூறி­யுள்­ளார்கள்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் கருத்­தியல் சார்ந்த வளர்ச்­சிக்கு இரண்டு முனை­களில் நிலை­மைகள் சாத­க­மா­கவும், தூண்­டு­த­லா­கவும் அமைந்­தி­ருந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இதில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் அரபு நாடுகள் பக்கம் சாய நேர்ந்த இஸ்­லா­மிய மதம் சார்ந்த உறவு நிலை முத­லா­வதும், முக்­கி­ய­மா­ன­து­மாகும். குறிப்­பாக அரே­பி­யா­வு­ட­னான பொரு­ளா­தார ஆத­ரவு மற்றும் சம­ய­ ரீ­தி­யான அர­சியல் நிலை குறிப்­பிட்டு கூறத்­தக்­கது.

இலங்­கையின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையின் மூலம் கிடைத்த திரை­க­ட­லோடி திர­வியம் தேடு­வ­தற்­கான வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­கான சந்­தர்ப்பம் முஸ்­லிம்­களை கடல் கடந்த முஸ்லிம் அரச ஆத­ரவு தளத்தை நாடு­வ­தற்­கான வழியை ஏற்­ப­டுத்­தி­யது. குறிப்­பாக அரே­பியா தனது செல்­வாக்கை இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் பரப்­பு­வ­தற்­காக பொரு­ளா­தார உத­வி­களைக் கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­தி­ய­தாக ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

சவூதி அரே­பி­யா­வுக்கு வேலை­தேடிச் சென்ற பலரும், வெறு­மனே பொரு­ளா­தார வாய்ப்­புக்­களை மட்டும் நாட­வில்லை. அந்த நாட்டின் முஸ்லிம் சமய கலா­சா­ரத்­தையும், அரே­பிய மொழி­யையும் பின்­பற்­று­வதில் ஆர்வம் காட்­டி­னார்கள். அந்த ஆர்வம் அரே­பி­யர்­களின் நடை, உடை உள்­ளிட்ட கலா­சா­ரத்தைப் பின்­பற்­று­வது ஒரு வகையில் நாக­ரிக மோக­மா­கவே அவர்­க­ளு­டைய மனங்­களில் படிந்­தி­ருந்­தன.

இந்த நாக­ரிக மோகமே இலங்கை முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார கேந்­தி­ர­மா­கவும், அவர்­களின் சமய மற்றும் வாழ்­வியல் கலா­சாரத் தலை­ந­க­ராக உரு­வ­கித்து குறிப்­பி­டப்­ப­டு­கின்ற காத்­தான்­கு­டியின் அதி­முக்­கிய நிலைக்­க­ள­னாக மாற்றம் பெற்­றது. அரே­பியா நாக­ரி­கத்­தையும், பண்­பாட்­டையும் வாழ்­வியல் அடை­யா­ளங்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்ற பல மாற்­றங்கள் இங்கு நிகழ்ந்­தன.

மாற்­றங்கள்

இந்த மாற்­றங்கள், கிழக்கு மாகா­ணத்தின் பாரம்­ப­ரி­யத்­தையும், இந்­துக்கள் மற்றும் கத்­தோ­லிக்க மக்­க­ளுடன் இசை­வான சமூக நிலைப்­பாட்­டையும் கொண்­டி­ருந்த, முஸ்­லிம்­களை அந்த பல்­லின சமூகப் போக்­கி­லி­ருந்து வேறு­ப­டுத்­தின. அத்­துடன் அரே­பிய கலா­சா­ரத்தின் அடி­யொட்­டிய ஒரு சிறிய அரே­பிய நக­ரா­கவும் காத்­தான்­குடி மாற்­ற­ம­டைந்­தது.

அரே­பிய கலா­சா­ரத்தைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான கட்­டி­டங்கள், வீடுகள் என்­பன­வற்­றுடன் பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த அரே­பிய நாட்டு வீதி­களை ஒத்த வகை­யி­லான வீதி அமைப்­புக்­க­ளையும் காத்­தான்­கு­டியில் காணலாம். காத்­தான்­குடி என்­பது கிழக்கு மாகாணம் மட்­டக்­க­ளப்பு நகர்ப்­பி­ர­தேச நகர்ப்­பு­றங்­களில் ஒன்­றாகும். அது முஸ்­லிம்­களின் ஒரு முக்­கிய வாழ்­வி­ட­மாகும். தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் மதத்தால் வேறு­பட்­டி­ருந்­தாலும், அவர்கள் தமி­ழர்கள். தமி­ழர்­களின் வாழ்­வி­ய­லுடன் இசைந்து வாழ்­கின்ற போக்கைக் கொண்­டி­ருப்­பார்கள். காத்­தான்­கு­டியின் வாழ்­வியல் இயல்பும் அத்­த­கை­யதே.

ஆனால் அரே­பிய சமூக, சமய, கலா­சாரம் நிலை சார்ந்த மோகம் செல்­வாக்கு பெற்­றதன் கார­ண­மாக அந்த வாழ்­வியல் நிலைமை மாற்­ற­ம­டைந்­தது. தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் தொன்­று­தொட்டு நிலவி வந்த ‘தேங்­காய்ப்­பூவும் புட்டும்’ போன்ற சமூக உறவின் சம­நி­லையும் மாற்­ற­ம­டைந்­தது. அத்­துடன் இஸ்­லா­மிய மதத்­திற்­குள்­ளேயே காணப்­ப­டு­கின்ற பல்­வேறு கொள்­கை­களின் அடிப்­ப­டை­யி­லான மத வழி­மு­றை­களும் இந்த வாழ்­வியல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்குத் துணை­போ­யி­ருந்­தன. அதே­வேளை, முஸ்­லிம்க­ளுக்­குள்ளே இருந்த பள்­ளி­வா­சலை நிலைக்­க­ள­னாகக் கொண்ட கட்­டு­ரு­வான கட்­ட­மைப்பும் இறுக்­க­மான ஒற்­று­மையும் தளர்ந்து போயின. இந்தத் தளர்­வுக்கு முஸ்­லிம்­களின் அர­சியல் போக்கில் ஏற்­பட்ட மாற்­றங்­களே முக்­கிய கார­ண­மாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

முன்னர் பள்­ளி­வா­சல்­களின் பரி­பா­லன சபை­யினர் அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்­ட­வர்­க­ளாக சமயம் சார்ந்த நியா­ய­மான சமூக நிலைப்­பாட்டில் இறுக்­க­மான பிடிப்பைக் கொண்­டி­ருந்­தனர். ஆனால் எல்லா துறை­க­ளிலும் ஊடு­ருவி செல்­வாக்கு செலுத்­திய அர­சியல் இந்த பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­க­ளையும் விட்டு வைக்­க­வில்லை. அந்த சபை­களில் ஊடு­ரு­விய அர­சியல் செல்­வாக்கு முன்­னைய முஸ்லிம் மக்­களின் பள்­ளி­வாசல் சார்ந்த சமூகக் கட்­டுக்­கோப்பை உடைத்து சின்­னா­பின்­ன­மாக்கி ஆளுக்­கொரு கொள்கை, ஊருக்­கொரு நிலைப்­பாடு என்ற நிலை­மைக்கு இழுத்துச் சென்­றது.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­களை முதன்­மைப்­ப­டுத்­திய தலை­மைத்­து­வமும், அதன் வழி­காட்­ட­லி­லான கட்­டுக்­கோப்பும் சிதை­வ­டைந்­த­மையும் காத்­தான்­கு­டியில் அரே­பிய நாக­ரிக மோகம் வளர்ச்சி பெறு­வ­தற்கு சாத­க­மான நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருந்­தது. இஸ்­லாத்தின் பல்­வேறு மதப் பிரி­வு­க­ளும்­கூட இதற்குத் துணை­போ­யி­ருந்­தன என்று முஸ்லிம் அறி­ஞர்கள் கூறு­கின்­றார்கள்.

இத்­த­கைய ஒரு பல­வீ­ன­மான நிலை­யி­லேயே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் முஸ்லிம் இளைய சமூ­கத்தின் மத்­தியில் ஆழ­மாகக் காலூன்­று­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இவ்­வாறு அந்த அடிப்­ப­டை­வாதம் காலூன்­று­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள், 1990 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளினால் முஸ்­லிம்கள் வடக்கிலிருந்து முற்­றாக வெளி­யேற்­றப்பட்­டதைத் தொடர்ந்து தமிழ் மக்­க­ளு­ட­னான சமூக உறவில் ஏற்­பட்ட ஆழ­மான விரிசல், அந்த விரி­ச­லுக்கு சுய அர­சியல் இலா­பத்தைக் கருத்­திற்­கொண்டு பின்­பற்­றப்­பட்ட அர­சியல் கொள்­கைகள் மற்றும் அவை சார்ந்த முரண்­பா­டான செயற்­பா­டுகள் என்­ப­னவும் வாய்ப்­பாக அமைந்­தி­ருந்­தன.

யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர், உள்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மத, இன­வாத தாக்­கு­தல்கள், வன்­மு­றைகள் என்­பன­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் அக நிலையில் ஆத­ரவு தேடி அலைக்­க­ழிந்­த­போது, அல்­கைடா மற்றும் ஐ.எஸ்­.ஐ.எஸ் போன்ற அனைத்­து­லக முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களின் முஸ்­லிம்­க­ளு­டைய வாழ்­வியல் இருப்­புக்­கான போராட்­டங்கள் ஓர் ஆத­ரவுத்தள­மாகத் தெரிந்­தது. இது மித­வாத முஸ்­லிம்­க­ளி­லும் ­பார்க்க, முஸ்லிம் இளைய சமூ­கத்­தினர் மத்­தி­யி­லேயே அதிக செல்­வாக்கைப் பிர­யோ­கித்­தி­ருந்­தது எனலாம்.

இணையம் வழி­யி­லான பல்­வேறு தொடர்­பாடல் கட்­ட­மைப்­புக்­களின் ஊடாக ஆட்­களை அணி­தி­ரட்­டு­கின்ற அந்த அமைப்­புக்­களின் நவீன சக்தி வாய்ந்த பிர­சார வெளி­யீ­டு­கள்­ இந்த இளை­ஞர்­களை இல­கு­வா­கவும், மிகவும் இர­க­சி­ய­மா­கவும் சென்­ற­டைந்­தன.

ஈரா­னிலும், சிரி­யா­விலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் கோரக் காட்­சிகள் அடங்­கிய காணொ­ளி­களும், அந்த அவ­லங்­க­ளுக்கு எதி­ரான கசப்­பான மன உணர்­வு­களின் வெளிப்­பா­டு­களும், அவற்றை ஆதா­ர­மாகக் கொண்டு, முஸ்­லிம்­க­ளுக்கு நியாயம் வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் வெளி­யி­டப்­பட்ட பிர­சார குரல் நறுக்­குகள், காணொளி நறுக்­குகள் மற்றும் எழுத்து வடி­வங்கள் என்­பன உள்­ளூரில் பாதிக்­கப்­பட்டு மனம் நொந்­தி­ருந்த இளம் உள்­ளங்­க­ளுக்கு உத்­வேகம் அளிப்­ப­தா­கவும், அந்த அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளுடன் இணைந்து தமது சமூ­கத்­திற்­காகப் போராட வேண்டும் என்ற மன உந்­து­த­லையும் ஏற்­ப­டுத்­தின.

இந்த மன உந்­து­தல்கள், உண்­மை­யான இஸ்­லா­மிய மதக் கோட்­பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லான வழி­மு­றை­களைக் கைவிட்டு, அனைத்­து­லக செல்­வாக்கு பெற்­றுள்ள அமைப்­புக்­க­ளுடன் கைகோர்க்க வேண்டும் என்ற வேட்­கையை அந்த இளம் உள்­ளங்­களில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. இந்த உணர்வு கிட்­டத்­தட்ட ஒரு மத­வெறி உணர்­வா­கவே ஊட்­டப்­பட்டு வளர்க்­கப்­பட்டு, அடிப்­ப­டை­வா­திகள் தவிர்ந்த ஏனையோர் அனை­வரும் எதி­ரிகள், கொல்­லப்­பட வேண்­டி­ய­வர்கள் என்ற கடும் நிலைப்­பாடுக்குத் தள்ளிச் சென்­றது எனலாம்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே முஸ்­லிம்­களில் ஒரு­சில குடும்­பங்­களும், ஒரு சில இளை­ஞர்­க­ளு­மா­கிய சிறிய அள­வி­லா­ன­வர்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் பிடியில் சிக்கி, உள்­நாட்டில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்தும் அள­வுக்கு தீவி­ர­வா­தி­க­ளாக மாறிப் போயினர்.

நல்­லெண்ண நட­வ­டிக்­கைகள்

இஸ்­லா­மிய அடிப்­படை பயங்­க­ர­வா­தத்தின் பெரும்­ப­குதி கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் கூறி­யுள்­ளது. அதே­நேரம், அந்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய பலர் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அவர்கள் வச­மி­ருந்த பல்­வேறு வகை­க­ளி­லான ஆயு­தங்கள், தாக்­கு­த­லுக்­கான தள­பா­டங்கள் என்­பன கைப்­பற்­றப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் நாட்டின் பொது பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இரா­ணுவம் அறி­வித்­துள்­ளது. பொது­மக்கள் அச்­ச­மின்றி தமது நாளாந்த வாழ்க்கைச் செயற்­பா­டு­களில் ஈடு­பட முடியும். பெற்றோர் தமது பிள்­ளை­களை அச்­ச­மின்றி பாட­சா­லை­க­ளுக்கு அனுப்ப முடியும். இதற்குத் தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்று இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

இந்த நிலையில் பல்­வேறு தரப்­பி­னரின் சந்­தேகப் பார்­வைக்கு ஆளாகி, மன சங்­க­டத்­திற்கு ஆளா­கி­யுள்ள முஸ்லிம் சமூகம், இஸ்­லா­மிய அடிப்­படை வாதத்­திற்கு இட­ம­ளிக்கப்போவ­தில்லை. அந்தத் தீவி­ர­வா­தி­க­ளுக்குத் தாங்கள் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என உறு­தி­ய­ளித்­துள்­ளது. அத்­துடன் அத்­த­கைய தீவி­ர­வா­திகள் பற்­றியும், அவர்­க­ளு­டைய மறை­வி­டங்கள் மற்றும் ஆயுதத் தள­பா­டங்கள் என்­பன பற்­றியும் பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும், பொலி­ஸா­ருக்கும் தகவல் தெரி­வித்து, அவர்­களின் தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உறு­து­ணை­யாகச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள்.

அதே­வேளை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தலை­யெ­டுப்­ப­தற்குக் கார­ண­மான நிலைப்­பா­டு­க­ளிலும், செயற்­பா­டு­க­ளிலும் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்குத் தாங்கள் தய­ாராக இருப்­ப­தா­கவும் முஸ்லிம் சமூகத்தினர் தெரி­வித்­துள்­ளனர். பாது­கப்புப் பிரி­வி­ன­ருக்­கான ஒத்­து­ழைப்பும், அது சார்ந்த செயற்­பா­டு­களும் உலக பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

அது மட்­டு­மல்­லாமல், தங்கள் தரப்பில் ஒரு சிறிய குழு­வினர் அல்­லது ஒரு சிறிய பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளினால் ஏற்­பட்ட நிலை­மை­க­ளுக்குப் பரி­கா­ர­மா­கவும் தமது நல்­லெண்­ணத்­தையும் மற்றும் தாங்கள் இலங்­கை­யர்கள் என்ற உணர்­வு­பூர்­வ­மான நிலைப்­பாட்­டையும் வெளிப்­ப­டுத்­த­ுவ­தற்­காக சில நட­வ­டிக்­கை­க­ளையும் முஸ்லிம் சமூ­கத்­தினர் மேற்­கொண்­டுள்­ளார்கள்.

குறிப்­பாக வெசாக் தினத்­தன்று முஸ்லிம் பெண்கள் சிலர் விகா­ரை­களில் வழி­ப­டு­வ­தற்­காக, பௌத்த முறைப்­படி கைகளில் தாமரைப் பூக்­களை ஏந்திச் சென்­றி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடை­பெற்று ஒரு மாதம் பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­தை­ய­டுத்து, அந்தத் தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் ஆத்ம சாந்­திக்­காக பல்­வேறு பள்­ளி­வா­சல்­க­ளிலும் துஆப் பிரார்த்­த­னை­களும், அஞ்­சலி நிகழ்­வு­களும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நட­வ­டிக்­கைகள் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­களை சந்­தே­கத்­து­டனும், பகை உணர்­வு­டனும் நோக்­கு­கின்ற பல்­வேறு தரப்­பி­ன­ரு­டைய மன நிலை­களை மாற்­று­வ­தற்கும், முஸ்­லிம்கள் இத­ய­முள்­ள­வர்கள், இரக்­க­மற்­ற­வர்­க­ளல்ல. அவர்கள் ஏனைய சமூ­கத்­தி­ன­ருடன் இணைந்து இசைந்து வாழவே விரும்­பு­கின்­றார்கள் என்ற நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­துள்­ளது.

குறிப்­பாக உள்ளூர் பயங்­க­ர­வா­தத்தின் எழுச்­சிக்கு முஸ்­லிம்­களில் ஒரு சிறு­ப­கு­தி­யி­னரே காரணம். அவர்கள் பிழை­யாக வழி­ந­டத்­தப்­பட்­டதன் கார­ண­மா­கவே உயிர்த்த ஞாயிறு தினத்தில் அனர்த்­தங்கள் ஏற்­பட்­டன. அந்த உள்ளூர் பயங்­க­ர­வா­தத்­துக்கும் தங்­க­ளுக்கும் சம்­பந்­த­மில்லை. அதற்குத் தாங்கள் இட­ம­ளிக்கப்போவதில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் முஸ்­லிம்­களின் இந்த நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன.

எது எப்படியாயினும், உள்ளூர் பயங்கர வாதம் முழுமையாகக் களையப்படும் வரை யில் 30 வருட மோசமான யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்த பின்னர் மோசமான உலக பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி அச்சத்தில் உறைந்துள்ள நாட்டில் நிரந்தரமான அமைதியும் சமாதானமும் உருவாகுவது முயற்கொம்பாகவே இருக்கும்.

பி.மாணிக்­க­வா­சகம்