தமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

251 0

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 19-ந் தேதி வரையிலும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் கடந்த மாதம் 18-ந் தேதி ஒரே நேரத்தில் நடந்தது.

இதேபோல காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சினைகளுக்கு உள்ளான 13 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ‘விவிபாட்’ எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதுதவிர பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. 3 வாக்கு எண்ணும் மையங்களும் மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் கமாண்டோ படையினரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

அதன்படி, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையை பொறுத்து 14 முதல் 22 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், பேப்பர் மட்டுமே உள்ளே கொண்டு செல்லலாம். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் மேஜை வாரியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்படும்.

சுற்றுவாரியாக பெற்ற வாக்குகள் விவரம் அடங்கிய நகல் வேட்பாளர்களுக்கும், அவர்களுடைய முகவர்களுக்கும் அளிக்கப்படும். முதல் சுற்று முடிவுகள் சுமார் 10 மணி அளவில் தெரியவரும். பிற்பகல் முன்னணியில் இருக்கும் வேட்பாளர்களின் நிலவரம் தெரியவரும். மாலை பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி நிலவரம் தெரிந்துவிடும். பெரிய தொகுதியாக இருந்தால் வேட்பாளர்களின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு இரவு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* 23-ந் தேதி (நாளை) காலை 8 மணி அளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கும். தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

* இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு பிறகு தொடங்கும்.

* மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும். மின்னணு வாக்கு எந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை பணி முடிவுற்ற பின்னர் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.

* தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.