இலங்கையை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு வளங்களை சுரண்டுகின்றனர்-அனந்தி

268 0

தமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு போட்டு கையகப்படுத்தும் வேலைகளையே முன்னெடுத்து வருவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமது நலன்ளைக் கருத்திற் கொண்டு இத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அனந்தி சசிதரன், கேள்வி கேட்பவர்களாக மக்கள் மாறும் வரையில் தொடர்ந்தும் அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டக் கொண்டு தான் இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழர் பகுதிகளிலுள்ள வளங்களை அரசாங்கம் ஆக்கிரமித்தும் அபகரித்தும் வருகின்றது. அதே போன்று இலங்கையிலுள்ள வளங்கள் முழுவதையும் சர்வதேச நாடுகள் பங்குபோட்டுக் கொண்டு கையகப்படுத்தும் வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றது. இலங்கை மீது அக்கறை அல்லது இலங்கையை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக் கொண்டே இங்குள்ள வளங்களை அவர்கள் சுரண்டி வருகின்றனர்.

நாட்டின் பல இடங்களிலும் இவ்வாறு வளங்கள் முழுவதும் சுரண்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் குறிப்பாக பலாலி விமான நிலைய அபிவிருத்தி செய்வதற்காக வளம் கொழிக்கும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் பெருமளவிலான மக்கள் நிலங்கள் அபகரிக்கப்படவுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஏனெனில் அங்குள்ள மக்கள் இன்னமும் தமது காணிகளுக்குச் செல்ல முடியாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அந்த மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்த மக்களின் காணிகளை விடுவித்து அவர்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்காமல் அக் காணிகளை சுவீகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராச பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு காணிகளை வழங்குவதாக குறிப்பிட்டிருக்கின்றார். மக்கள் அகதிகளாக இருக்கின்ற நிலையில் அவர்களது காணிகளை ஆக்கிரமித்த அபிவிருத்தி செய்வதென்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அவ்வாறு மக்கள் அகதிகளாக இருக்கின்ற போது அதனை அபகரிக்க சம்மதம் தெரிவிப்பது வேடிக்கையானது.

ஆகவே அந்த விமான நிலைய அபிவிருத்திக்கு தேவையான காணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதிக் காணிகளை விடுவித்து மக்களுக்கு அந்தக் காணிகளை வழங்க வேண்டும். ஆகவே மக்கள் பிரதிநிதிகள் என்பதற்காக மக்களின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அவர்களின் தேவைகளைக் கவனத்திற் கொள்ளாது முடிவுகளை எடுக்கக் கூடாது. ஆகவே இவை தொடர்பில் அந்த மக்களுடன் உரிய கலந்துரையாடல்களை நடாத்தி அவர்கள் விருப்பத்திற்கமைய முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் மாவட்ட அரச அதிபர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் விருப்பத்திற்கமையே இறுதி தீர்மானங்களை எடுப்பதே சிறந்ததாக அமையும். இதில் குறிப்பாக இந்த விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் நாங்கள் மாகாண சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம்.

ஆனால் இப்பொது மாகாண சபை கலைக்கப்பட்டிருந்தாலும் அந்த தீர்மானங்களைக் கவனத்திற் கொண்டு செயற்படுவதே பொருத்தமானதாக இருக்கும். போருக்கு பின்னரான நிலையில் பல சர்வதேச நாடுகள் இலங்கையின் வளங்களை தாம் கையாளும் அல்லது சூறையாடும் நிலை இருக்கிறது. அதனை அந்தந்த பிரதேச அரசியல்வாதிகளும் அரசும் தான் தீர்மானிக்கிறது. ஆனால் அந்த பிரதேச மக்களுக்கு ஏதும் தெரியாது. மக்களுக்கு தெரியப்படுத்தாமல் பல ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு எங்கள் அரசியல்வாதிகளும் துணைபோகின்றனர். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் ஏனெனில் அந்தந்த பிரதேசங்களில் உள்ள மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகள் தங்களுக்கு தேவையானவை எங்கு எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை சுரண்டுவார்கள். இதற்காக அரசியல் பிரமுகர்களையும் திருப்திப்திப்படுத்திக் கொண்டு அந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். ஆகையினால் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு கேள்வி கேட்பவர்களாக மக்கள் மாற வேண்டும். அவ்வாறு மாறாத வரையில் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் என்றார்.