நாட்டின் தேசிய பாதுகாப்பை ஸ்தாபிக்குமாறு எம்மால் அழுத்தங்களை மட்டுமே விடுக்கமுடியும்-பந்துல

279 0

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே பந்துல குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை ஸ்தாபிக்குமாறு எம்மால் அழுத்தங்களை மட்டுமே விடுக்கமுடியும். ஆனால், அரசாங்கம் அதனை செய்ய தவறிவருகிறது.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய தலைவராக மஹிந்த ராஜபக்ஷ திகழ்ந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரையான அவரது காலத்தில் மின்பிறப்பாக்கிக் கூட இலங்கையில் வெடித்ததில்லை.

இவ்வாறான ஒருவரிடம் நாட்டை மீளவும் கையளிக்க வேண்டுமெனில், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவேண்டும்.  இதிலிருந்து அரசாங்கம் விடுபடவே முடியாது.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாத காரணத்தினால்தான், மக்களுக்கு அச்ச உணர்வை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், இதனைவிட பாரிய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் 1989 ஆம் ஆண்டு தேர்தலின்போது முகம் கொடுத்துள்ளார்கள்.

அவ்வாறான நிலையில்கூட மக்கள் தமது ஜனநாயகக் கடமையை அன்று நிறைவேற்றினார்கள். இதேபோல, எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்”  என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.