நீதியை நிலைநாட்ட இலங்கை தவறிவிட்டது-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

248 0

மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள், அதாவது ஒரு தசாப்தம் நிறைவடைந்த பின்னரும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடையும் அதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினமும் இன்று  அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமுதாயத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வாழ்விடங்களை அமைப்பது மட்டும் போதுமானதல்ல. மாறாக, உரிமைகளை மீள கட்டியெழுப்புவதோடு, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தவறவிட்டு வருவதோடு, இரு தரப்பிலும் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் உண்மையை வெளிப்படுத்தவும் தவறிவிட்டதென கூறியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து உரிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளமை மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் என்பவற்றை கருத்திற்கொண்டு, இலங்கையின் ஒவ்வொரு பிரஜைகளினதும் மனித உரிமையை அரசாங்கம் நிலைநாட்ட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, நீதி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டல், மனித உரிமையை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேலும் தெரிவித்துள்ளார்.