அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்புக்கள் ஆழமானவை. மிகமிக ஆழமானவை. அந்த சோகத்தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்டுப்பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும்.
அந்தப் பதைபதைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்படியே உலுக்கி எடுக்கும். முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை இதுதான்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்புக்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுப் பார்க்கவே விரும்புவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் நனவுகளாக எந்தெந்த சந்தர்ப்பங்களில் மேலெழுந்து மெய்நடுங்கி மனம் நோகச் செய்யும் என்பது அவர்கள் எவருக்குமே தெரியாது.
கதைப் போக்கில் முள்ளிவாய்க்கால் பற்றி பிரஸ்தாபித்தாலே போதும். அங்கு நடந்த கோரக்காட்சிகள் மனங்களில் வாழ்வியலாக விரிந்து நடுங்கச் செய்யும். ஆற்றாமையும், இயலாமையும் ஆட்கொள்ள இதயம் அசுர வேகத்தில் துடிக்கும். தலைகனத்து சம்மட்டியால் அடித்தது போன்று இடிக்கத் தொடங்கும். என்னவோ செய்வது போல வயிறு கனத்து, கலங்கி ஏதேதோ நினைவுகள் மனதில் முட்டி மோதும்.
பத்து வருடங்கள் என்ன, நூறு வருடங்கள் கடந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவுகள் மனங்களில் இருந்து மறைந்து போகாது. அந்த அளவுக்கு முள்ளிவாய்க்கால் துயரங்கள் சக்தி வாய்ந்தவை. அந்த நினைவுகளில் சிக்கி காலச்சக்கரத்தில் சென்றது போன்று அன்றைய வாழ்வியலுக்கே சிலர் ஆளாகிவிடுவதுண்டு.
உளவியல் ரீதியான முள்ளிவாய்க்கால் துயரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தத் துயரத்தை ஒரு கூட்டு நிகழ்வாக நினைவுகூர்ந்து, அழுது, அரற்றி, ஆற்றிக்கொள்வதற்கு அவர்களுக்கு இன்னுமே சந்தர்ப்பம் சரியாகக் கிட்டவில்லை.
துயரம் காரணமாகத் துவண்டு போகின்ற மனங்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் மிகமிக அவசியம். தன்னோடு பாதிக்கப்பட்ட ஏனைய உறவுகளுடன் மனந்திறந்து பேசி, அந்த கூட்டுத் துயரத்தில் தமது கவலைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் அவலத்தில் சிக்கித் தவித்தவர்கள் இந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள முடியாதவர்களாகவும், அந்த துன்பக்கிடங்கில் இருந்து மேலெழுந்து வர முடியாதவர்களாகவும் சமூகத்தில் காணப்படுகின்றார்கள்.
அங்கு அரச படைகள் நடத்திய கோர தாண்டவத்தின்போது, பெற்றவர்கள், பிள்ளைகள் மற்றும் உற்றவர்கள் உடல் சிதறி உயிரிழந்து போக, அந்த இழப்பின்போது அழுது அரற்றி, துன்பத்தை வெளிப்படுத்தி, மனம் கசிந்து, கண்ணீர் உகுத்து, பலருக்கும் அவர்களை அடக்கம் செய்ய முடியாமல் போனது.மழையென பொழிந்த எறிகணைகளிலும், சீறி வந்த துப்பாக்கிக் குண்டுகளிலும், கடற்பரப்பில் இருந்து பாய்ந்து வந்த பீரங்கிக் குண்டுகளும் உடல்களைப் பிய்த்தெறிந்து மக்களை சின்னாபின்னமாக்கியதால் சிதறிய உடற்பாகங்களைப் பொறுக்கி எடுத்து ஒன்றாக்கி, பாதிப்புகளில் இருந்து உயிர்தப்பியவர்களினால் ஓர் அடக்க நிகழ்வை செய்ய முடியாமல் இருந்தது.
இறந்தவர்கள் போக மிஞ்சியவர்கள் உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக ஓடித்தப்ப வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் படுகாயமடைந்து குற்றுயிராகக் கிடந்தவர்களையும் கூட கண்டகண்ட இடங்களில் கைவிட்டுச் செல்கின்ற அவல நிலைமை. கல்நெஞ்சம் கொள்ள வேண்டிய அந்தத் தருணங்களுக்கு ஆளாகித் தவித்தவர்களின் துயரங்களை எழுத்தில் வடிக்க முடியாது.
இரத்த உறவுகளையும், உற்றவர்களையும் அநியாயமாக சாகக் கொடுத்த துயரம் ஒருபக்கம்.
இறுதி நேரத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையோ அல்லது அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளையோ செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற மாளாத் துன்பம் பாதிக்கப்பட்டோரின் மனங்களில் மண்டிக்கிடக்கின்றன. இந்தத் துயரங்கள் அவர்களைத் துரத்தித்துரத்தி வாட்டி எடுக்கின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் ஒழுங்கமைப்பில் ஆரவாரமின்றி அமைதியான முறையில் ஆன்மீக சிந்தனையோடு அனுட்டிக்கப்பட வேண்டியது. அத்தகைய ஒழுங்கமைப்பு கடந்த பத்து வருடங்களில் ஒரு தடவையேனும் நினைவேந்தலை ஒழுங்கு செய்தவர்களினால் செய்யப்படவில்லை. வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் முதன் முதலாக எதிர்ப்புகளுக்கும், இராணுவ, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
அச்சமான சூழலில் முன்னெடுக்கப்பட்ட அந்த நினைவேந்தல்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களிலும், ஏனையோரின் மனங்களிலும் சிறிதளவு ஆறுதலைத் தந்தன.
அச்சுறுத்தலையும் மீறி அனுட்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் தேடி வருவார்களோ, தேடி வந்து என்னென்ன செய்வார்களோ என்ற அச்சம் கவிழ்ந்த மனநிலையில் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிக்க நேர்ந்திருந்தது. இந்த நிம்மதியற்ற நினைவேந்தலினால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஆறுதலளிப்பதாகவோ அவலமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக மனதாரப் பிரார்த்தனை செய்து மனமாறவோ அவர்களில் எவராலும் முடியவில்லை.
அந்த நினைவேந்தல்களில் கலந்து கொண்டால் இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும் தங்களுக்கு எந்தெந்த வகையில் என்னென்ன தீங்கு நேருமோ, என்று நெஞ்சம் கலங்கிய நிலையில் முள்ளிவாய்க்கால் துயரந்தோய்ந்த நெஞ்சம் கொண்ட பலரும் வீடுகளில் ஏங்கித் தவித்து வீடுகளில் முடங்கிக் கிடந்ததுண்டு. இந்த அவல நிலைமை அரசியல் உரிமைக்காகப் போராடி, பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் வரையில் அடித்து நொறுக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்திருந்தது. இந்த அவலத்தினதும், துயரத்தினதும் அளவையும் வேதனையையும் எவராலும் எடுத்துரைத்து விளக்கிக் கூற முடியாது.
யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு எவரையும் அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை.இதனால் இரத்தத்தில் தோய்ந்த அந்த மண்ணுக்குச் சென்று தமது உறவினர்களும் உற்றவர்களும் உயிரிழந்த இடங்களை நேரில் தரிசித்து மன ஆறுதலடைவதற்கான சந்தர்ப்பமும் நீண்ட காலமாக அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றம் அனுமதிக்கப்பட்டு,மக்கள் அங்கு சென்றுவருவதற்கான அனுமதி வழங்கப்பட்ட தருணங்களும், அங்கு சென்றவர்கள் எங்கெங்கு செல்கின்றார்கள், என்னென்ன செய்கின்றார்கள், யார்யாரோடு கதைக்கின்றார்கள் என்று கண்காணிப்பதற்காக நிழல்போல தொடர்ந்த இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் அந்த மக்கள் மனங்களில் மேலும் மேலும் அச்சத்தையும் பீதியையும் விதைப் பதற்கே வழிவகுப்பனவாக அமைந்திருந்தன.
நினைவேந்தல் என்பது மனம் அமைதியடைவதற்கும், ஆறுதல் பெறுவதற்குமாக அனுட்டிக்கப்பட வேண்டியது. அது நிர்ப்பந்தமான நிலையிலோ அச்சுறுத்தலான ஓர் உளவியல் சூழலிலோ அனுட்டிக்கப்பட முடியாதது. அத்தகைய நிகழ்வுகளை நினைவேந்தல் என்று வரையறுக்கவோ வகுத்துக் கூறவோ முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களை இம்சிக்கவும், கொடூரமாகக் கொடுமைப்படுத்தவுமே உதவும் எனலாம்.
முதன் முதலாக முள்ளிவாய்க்காலிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நிகழ்த்தியபோது, முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்றே கூற வேண்டும். மாகாணசபை உறுப்பினர்களும், அவர்களைச் சார்ந்தவர்களுமே அங்கு கூடியிருந்தார்கள். அந்த நிகழ்வு முழுக்கமுழுக்க அரசியல் மயமான ஒரு நிகழ்வாகவும், ஒரு சம்பிரதாய நிகழ்வாகவுமே நடந்தேறியது.. தொடர்ந்து அங்கு இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளும் கட்சி அரசியல் நிழல் படிந்ததாகவும், அரசியல் மயமானதாகவுமே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
ஓர் உணர்வு பூர் வமான பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கவல்ல புனிதமானதொரு நினைவேந்தல் நிகழ்வாக அந்த நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதற்கு எவராலுமே முடியாமல் போனது. இது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் சோகமான ஒரு பக்கம்.
போட்டி நிகழ்வாகிப் போன நினைவேந்தல்
வடமாகாண சபையின் பொறுப்பில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகள் முன்னாள் போராளிகள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் வருகையோடு ஒரு போட்டி நிகழ்வாக மாறிப்போனது. முன்னாள் போராளிகள் மாவீரர் நாள் நிகழ்வொழுங்கின் அனுபவத்தோடும், பொறுப்புரிமையோடும் பங்கெடுத்து அதனைச் சிறப்பிக்க முயன்ற போதிலும், மேலாண்மை மனப்பாங்குடன் பங்கேற்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அந்த நிகழ்வை முழுமையாக ஆக்கிர மித்திருந்தார்கள்.
ஒழுங்கமைப்புக்கள் அவர்களின் சுயவிருப்பத்தின் பேரிலேயே இடம்பெற்றிருந்தன. வடமாகாண சபையும் அந்த நினைவேந்தல் காட்சியில் இருந்து ஒதுங்க வேண்டிய நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் விருப்பு வெறுப்புக்குட்பட்டு முன்னாள் முதலமைச்சரும் நிகழ்வில் ஒரு பொம்மையைப் போன்று பங்கேற்கின்ற நிலைமை உருவாகியிருந்தது.
இந்த அமளிகளுக்கிடையில் நினைவேந்தல் நிகழ்வுகளில் மனமொருமித்து பங்கேற்க வேண்டிய, உண்மையாகவே முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களும் அந்த ஒப்பேற்றலுக்கான நிகழ்வகளில் மனம் ஒட்டியும் ஒட்டாத நிலையில் பங்கேற்க நேர்ந்திருந்தது.
இறுதியாக நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு பலதரப்பட்டவர்களினதும் காரசாரமான விமர்சனங்களுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியது. அடுத்த நினைவேந்தல் நினைவாகிய பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒரு பொது அமைப்பினால் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை மேற்கொள்வதற்கு வழிவகுத்திருந்தது.
உள்ளூர்வாசிகளான முள்ளிவாய்க்கால் மற்றும் அதனைச் சூழ்ந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பங்களிப்பின்றியே முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தேறி முடிந்தன.
பத்தாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது சிறப்பாகவும் சீரான முறையிலும் ஒழுங்கமைக்கப்பட்டு, பலதரப்பட்டவர்களினதும் பங்களிப்புடன் நேர்த்தியாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கியிருந்தது.
ஆனால், கொழும்பையும் மட்டக்களப்பையும் மையப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களினால், நிலைகுலைந்துபோன நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கக்கூட முடியாத அளவுக்கு மோசமாகிப் போயின.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று விடுவார்கள் என்ற கற்பனாவாத கருத்தியல் காரணமாகவே, அதனை சுதந்திரமான முறையில் அனுட்டிப்பதற்கு அரசாங்கம் மறுத்திருந்தது. தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை நினைவில் தேக்கி, போர்க்குற்றச் செயல்களுக்கு அரசு பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் சோர்வின்றி நீண்டகாலத்திற்கு வலியுறுத்தி தொல்லை கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வழங்கிவிடும் என்ற எண்ணமும் இந்த அனுமதி மறுப்புக்குப் பின்னணி காரணமாகத் தெரிகின்றது.
எது எப்படி இருப்பினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, ஓர் அரசியல் கலந்த நிகழ்வாகவும் தமிழ் மக்களின் ஆன்மாவைக் கீறிக் குதறிய அந்த நிகழ்வுகளை நினைவேந்தல் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைக்களனாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இது தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்ற ஆன்மீகத்தின் சோர்வடையாத வளர்ச்சி நிலைக்கும் உறுதியானதோர் அரசியல் விடிவுக்கான திறப்பு வாயிலாகவும் கட்டி ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
அது ஆன்மீக, சமூக, அரசியல் சார்ந்த நிகழ்வாக வாழையடிவாழையாகத் தொடர்ந்து பின்பற்றி நினைவேந்தப்படுத் தக்கவகையில் கட்டமைக்கப்பட வேண்டும். அது ஒரு வழி நிகழ்வாகவோ அல்லது ஒரேயொரு முறையிலானதாகவோ அமையாமல் தமிழ் சமூகத்தின் பல்வேறு கிளைகளில் ஊறித் திளைக்கின்ற பன்முக முறையிலானதாக உருவாக்கப்பட வேண்டும்.
அதற்குரிய உறுதியான தீர்மானத்தைப் பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்வதற்கான அடித்தளத்தை இடுவதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது நிகழ்வு அமைய வேண்டும்.
பி.மாணிக்கவாசகம்

