பத்திரிகையாளர்களை தாக்கிய புலனாய்வு அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்துவதா? லசந்தவின் மகள் கடும் கண்டனம்

316 0

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில்   பத்திரிகையாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டார் என கருதப்படும் இலங்கை புலனாய்வு பிரிவு அதிகாரி பிரபாத் புலத்வத்தே மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தில் உள்ள விசேட படையணி ஒன்றிற்குள் மேஜர் பிரபாத்புலத்வத்தே கொலைகளில் ஈடுபடும் குழுவொன்றை இயக்கிக்கொண்டிருந்தார் என சிஐடியினரே குற்றம்சாட்டியுள்ளனர் இதனை நான் இலங்கை இராணுவதளபதிக்கும் தெரிவித்துள்ளேன் என அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இந்த அதிகாரிக்கு எதிராக இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த பல அதிகாரிகளும் பொதுமக்களும் துணிச்சலுடன் முன்வந்து  ஆதாரங்களை வழங்கியுள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலத்வத்தேயினை மீண்டும் முக்கிய பதவிக்கு நியமிப்பது அவரது  பிழையான நடவடிக்கைகள் குறித்து குரல்கொடுத்த இராணுவஅதிகாரிகள் மற்றும் ஏனைய சாட்சியங்களிற்கு மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தும் எனவும் அகிம்சா தெரிவித்துள்ளார்.

புலத்வத்தே தனது அரசியல் எஜமானர்களின் அறிவுறுத்தலின் கீழ் அரசியல் நோக்கங்களிற்காக பத்திரிகையாளர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தவேளை  விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வெல்வதற்காக தங்களை அர்ப்பணி;த்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான திறமையான புலனாய்வுபிரிவினருக்கு இது பிழையான செய்தியை சொல்வதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் தற்போதை சூழ்நிலையில் தனிப்பட்ட பகைகளை தீர்த்துக்கொள்ள முயலாத திறமையும் தொழில்சார் தன்மையும் கொண் புலனாய்வு துறையினரே  இலங்கைக்கு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலத்வத்தேம் அவரது எஜமானர்களும் நியாயப்படுத்தப்படுவதையும் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்படுவதையும் விரும்புவர்களின் அச்சுறுத்தலிற்கு  அடிபணியவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.