மதத்திற்காக உயிரை பறிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது –

293 0

மதத்திற்காக உயிரைப் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் முதற்தடவையாக நேற்று  மாலை ஆலய பங்கு மக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன்போது, அங்கு ஆற்றிய பிரசங்கத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் 100க்கு அதிகமானவர்களைப் காவுகொண்ட தாக்குதல் இந்த தேவாலயத்திலேயே பதிவானது. இந்த அனர்த்தத்தின் பின்னர் முதற்தடவையாக நடைபெற்ற திருப்பலியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயப்பட்டவர்கள், அருட்தந்தையர்கள் என பலரும் பங்கேற்றனர்.

கடுமையான பாதுகாப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்த திருப்பலி பிரசங்கத்தின்போது மேலும் தெரிவித்த பேராயர், “மதம் என்பது உயிரை வாழ வைப்பதற்காகவே இருக்கின்றது. உயிரை வலுப்படுத்துவதற்கானது. வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கவே மதம் உள்ளது.

மாறாக மதம் என்பது வாழ்வை அழிப்பதற்காகவல்ல. அந்தவகையில் வாழ்க்கையை அழித்தவர்களுக்கு நாம் கூறுகின்றோம் நாம் உங்களைப் பழிவாங்கப்போவதில்லை. நாங்கள் உங்களை அடிக்க வரப்போவதில்லை. மாறாக ஆண்டவரின் நீதிமன்றத்திற்கு ஒப்புவிக்கின்றோம். எமக்கு மீண்டும் இரத்த ஆறு ஓடுவது அவசியமற்றது. அன்பு, இரக்கம், கருணை ஆகியவற்றில் நிறைந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கையே அவசியமானது.

சிறப்பாக மீள கட்டப்பட்டு அழகாக மிளிர்ந்த தேவாலயத்தின் திருவிழாவினைக் கொண்டாடுவதற்காக ஜனவரியில் வந்தபோது நான் கூறினேன், தேவாலயம் என்பது கட்டடங்களுக்காக அன்றி அங்குவாழும் மக்களுக்காகவே நினைவுகூரப்படவேண்டும். இந்தப்பகுதியில் புனிதர்களாக மக்கள் வாழவேண்டும் என்றேன்.

கடந்த உயிர்த்த ஞாயிறு திருப்பலியின்போது இடம்பெற்ற தாக்குதலாக இங்கு சிந்தப்பட்ட குருதியின் மூலமாக இந்த தேவாலய பங்கு தேவ சாட்சிகளின் தேவாலயமாக மாறியுள்ளது.

தாக்குதலால் நாம் வீழ்ந்துவிடக்கூடாது மீண்டுமாக எழுந்துவிடவேண்டும் எமக்காக உயிர்களைத் தியாகம் செய்த உறவுகளுக்காக மீண்டுமாக எழுந்து நாம் வாழ்ந்து காட்டவேண்டும்” என தெரிவித்தார்.