‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம்

687 0

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது.

இலங்கையில் கொழும்பு , நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் அபு உபைதா எனும் ஐ.எஸ். பெயருடைய  சஹரான் ஹஸ்மியும் அடங்குவதாக அறிவித்திருந்தது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவராகச் செயற்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஹாஸிம் மொஹமட் சஹ்ரான், தாக்குதல் தாரிகளில் ஒருவரும் தலைவருமாவார் என்றுதான் பாதுகாப்புத் தரப்பு உட்பட அனைவரும் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

நாட்டில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றதையடுத்து கிழக்கின் காத்தான்குடியும் இலக்கு வைக்கப்பட்டது. அது எதற்காக என்றால், தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த சஹ்ரான்தான் காரணம். இலங்கையின் ஊடகங்கள் மட்டுமல்ல; உலகின் மூலை முடுக்கிலெல்லாம் இருக்கும் அனைத்து ஊடகங்களும் அவரைத்தான் தேடின.

அனைவரும் தேசிய தௌஹீத் ஜமாதின் பள்ளிவாசல், சஹ்ரான் வசித்த வீடு, அவருடைய சகோதரி, சகோதரர்கள், உறவினர்களின் வீடுகள், அவர் கற்ற இடம் என்று புலனாய்வாளர்கள் விசாரணை செய்வதற்கு முன்னரே, சென்றுவந்து கொண்டேயிருந்தன.

சமூக சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் பல வேளைகளில் பூட்டப்பட்டு இருந்தது. சஹ்ரான் வசித்த வீட்டிலும் யாருமில்லை. சகோதரியைச் சந்திக்கமுடியவில்லை எனப் பலவற்றில் தோல்வியும் கண்டன. இன்னும் அது முடிவுக்கு வந்துவிடவில்லை. ஏன் சஹ்ரானை அனைவரும் முதன்மைப்படுத்துகிறார்கள். அவர் ஒரு தீவிரவாதியல்லவா என்ற கேள்விகளும் பலரிடமிருந்தும் எழுந்தன.

நாட்டில் அனைத்து இடங்களிலும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ஆனால் காத்தான்குடியிலிருந்து அடிப்படைவாதச் செயற்பாடு உருவாகியிருக்கிறது. அது சஹ்ரானின் தீவிரவாதமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்போதைய முடிவாக இருக்கிறது. இது முடிந்து விடவேண்டும் என்று, கடந்த 10 வருடங்களாக அமைதியாக இருந்த நாட்டு மக்கள் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இப்போது சஹ்ரான் உயிரோடிருக்கிறார் என்ற கதை அதனை உடைத்தெறிந்திருக்கிறது.

ஆனால், இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒற்றுமையையும் சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் பின்பற்றும் சூபித்துவ தரீகா வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமூகங்களுடனும் இணைந்து வாழ்கிறார்கள். எப்போதும் அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகமாகவே முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அன்று காத்தான்குடிப் பள்ளிவாயல், சதாம் ஹுசைன் கிராமம், அழிஞ்சப்பொத்தானை,  மூதூர், வட புல வெளியேற்றம் என்று முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு பூராகவும் விடுதலைப் புலிகளால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டபோதிலும் அவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை.

வடக்கு, கிழக்குக்கு வெளியே மாவனல்லை, அளுத்கமை, கின்தோட்டை, திகன என்றெல்லாம் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும், ஆயுதம் தூக்கவில்லை. இவ்வாறு அமைதியான சமூகம் என்று ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பெயரெடுத்த ஒரு சமூகம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாத சமூகமாக பார்க்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம்களின் இயல்பான மனோநிலையை அறிவதாயின் இஸ்லாமிய சூபித்துவத்தைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.

சூபித்துவம் என்பது உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தி இறைவனை அடைய வழிகாட்டுகிறது. ஒற்றுமையையும் சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.

இலங்கையின் முதலாவது பள்ளிவாயல் பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயலாகும். அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள அஷ்ஷெய்க் ஷிஹாபுத்தீன் றஹிமஹுல்லாஹ் ஒரு சூபி மகான் ஆவார்.

இது போல் இலங்கையின் பல பாகங்களிலும் இஸ்லாத்தை பரவச் செய்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த இஸ்லாமிய சூபி பெரியார்களே ஆவர். இதற்கு நாட்டின் பல பாகங்களிலும் அமைந்துள்ள இஸ்லாமிய சூபி பெரியார்களின் அடக்க தலங்கள் (தர்காக்கள்) சான்றாகும்.

இந்த பெரியார்கள் அனைவரும் சமத்துவத்தையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் போதித்து வந்தனர். இஸ்லாமிய அடிப்படை வாதத்தையோ தீவிரவாதத்தையோ இந்தப் பெரியார்கள் போதிக்கவில்லை. இவர்கள் போதித்த சமாதான வழிமுறை சூபித்துவம் என்றும் தரீகா என்றும் அழைக்கப்படுகிறது.

இன்றும் இவ்வாறான சூபித்துவத்தையும் தரீகாக்களையும் பின்பற்றும் முஸ்லிம்கள் இலங்கையில் பரவலாக காணப்படுகின்றார்கள் என்று சூபி முஸ்லிம்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் தான், எங்கிருந்து வந்தது இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம்? என்ற கேள்வி தோன்றுகிறது. சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்ற ஒரு சமூகத்துக்குள் எங்கிருந்து இத்தீவிரவாதம் வந்தது?

ஒரு சிறு எண்ணிக்கையானவர்களாகத் தீவிரவாதிகள் இருந்தபோதும், அதைத் துடைத் தெறிவது எப்படி? என்பதை ஒரு சமூகம் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டியது, நமது கடமையாகும். தவறின், இதனால் பாதிக்கப்படப்போவது நமது முஸ்லிம் சமூகம்தான் என்ற முடிவான நிலைக்கு நாட்டிலுள்ள முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். இருந்தாலும் அது முழுப்பயனைத் தருவதாக இல்லை.

தொடர்ச்சியாகவும் பிரமிட் வடிவிலும் முடிவில்லாமலும் தொடரும் தேடுதல்கள் இன்னமும் பலவற்றை வெளியில் கொண்டு வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் பழைய நிலைமைக்குத் திரும்பவேண்டும் என்று இராணுவத்தளபதி லெப்ரினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா முப்படையினரும் பொலிஸாரும் இரவு பகலாகப் பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

முகாம்களைப் பராமரிப்பதும், தோட்டங்களை நடத்துவதும் பொதுவான விடயங்கள் என இருந்த இராணுவம் ஒரு புறமும், எங்காவது குண்டு வெடித்ததா என்று கேட்குமளவில் இருந்த ஊடகங்களுக்கும் நல்ல வேலைவைத்த சஹ்ரான் உயிருடன் இருக்கிறார் என்ற கதை இன்னமும் இதனைத் தொடரச்செய்யும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்வதேச அளவில் இயங்கும் ஐ.எஸ் அமைப்பு, இலங்கையில் சஹ்ரானை தலைவராக நியமித்திருந்தால் அவர் இறப்பதற்கு அல்லது வெடிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்காது. அவ்வாறில்லாமல் அவர் தற்கொலைதாரியாக வெடித்திருந்தால் அவர் தலைவராக இருக்கவில்லை. வேறு யாரோ தலைவர் இங்கிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும். அப்படியானால் அவரைத் தேடியாகவேண்டும்; கண்டுபிடிக்க வேண்டும். இது இப்போதைக்குச் சாத்தியமற்றதே.

சில வேளைகளில் இந்தத் தலைவரைத் தேடுவவதில் உள்ள சிரமத்தை, சிக்கலைத் தவிர்ப்பதற்காக சஹ்ரான் உயிருடன் இருக்கிறார் என்ற கதை பரவ விடப்படுகிறதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

தேடுதல்களில் கண்டுபிடிக்கப்படுவவைகள், கைது செய்யப்படுபவர்கள் பற்றி ஒரு கதை வெளியில் வந்தால் அதற்கு கை , கால் மூக்கு வைத்து மேலும் ஊதிப் பெரிதாக்கியதாகவே ஊடகங்கள் பல முயல்கின்றன. வெளிவரும் தகவல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற சூழலில் இப்போது சஹ்ரானும் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்பதுதான் முடிவில்லாத எதிர்பார்ப்பாக இருக்கப்போகிறது.

வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று நாம் எல்லோரும் பொதுப்படையாக அறிந்திருந்தாலும், ஷியா, சுன்னி, சூபி, வஹ்ஹாபி என்று பல வகைப்பட்டதாக இருப்பதை அறிகிறோம். இவற்றில் வஹ்ஹாபிச் சிந்தனையின் வளர்ச்சியே தீவிரவாதத்தை வளர்த்துவருகிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

இந்த இடத்தில் வரும் இலங்கைக்குள் இஸ்லாமிய அடிப்படை வாதமாகக் கொள்ளப்படும் வஹ்ஹாபிச் சிந்தனையின் வருகையால் தான் தீவிரவாதம் உருவானது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

-இலட்சுமணன்