முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் வரலாற்றின் விடுதலைக் கோட்பாடு — ஈழத்து நிலவன் –

1171 0

இன அழிப்பின் பத்தாவது வருடத்தில் நிற்கிறோம், அழிக்கப்பட்டுக்கொண்டே… – முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்
“ஒடுக்குவோர் ஒருபோதும் தாமாக முன்வந்து சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை;
ஒடுக்கப்படுவோர் அதைப் போராடிப் பெறவேண்டும்.”

ஒரு இறைமையுள்ள தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடாமல் களமாடிய அக்கடல், எமக்கு விட்டுச் சென்ற ‘வரலாற்றின் விடுதலைக் கோட்பாடு’
தமிழீழ விடுதலை’ எக்காலத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாத மக்கள் கோரிக்கை

ஒரு போராடும் இனம் படைத்துறை ரீதியாக வீழ்த்தப்படுவதோ, அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்படுவதோ அது அந்த இனத்தின் தோல்வியல்ல.
ஆனால் தமது அழிவுக்குக் காரணமான இன அழிப்பு அரசின் மூலக் கருத்தியலுக்குள் உள்மடிந்து எப்போது
ஒத்திசையத் தொடங்குகிறதோ அப்போதுதான் அந்த இனம் தோல்வியை நோக்கி நகரத் தொடங்குகிறது.

பாதிப்பின் ஆழத்தை உணர்ந்தால் நாமே மீண்டெளலாம், உணர்வது கடினம் ஏனெனில் 30 வருடங்களாக உயிரை துச்சமென நினைத்து வாழ்ந்த இனம், வாழவேண்டும் என்ற துடிப்பு ஊட்டபட வேண்டும்.இப்போதும் பலர் நடைப்பிணமாகவே வாழ்கிறார்கள்,

நடுநிலை என்ற ஒரு நிலை எப்போதும் இருக்க முடியாது. அது பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதியை தடுக்கும் அல்லது மடை மாற்றும் எதிர்த் தரப்புடனான ஒரு வகை கூட்டணியே..

அபிவிருத்தி ( development ), நல்லிணக்கம் ( Reconciliation ) முன்னேற்றம் ( Improvement ), தேசபக்தி ( Patriot ), இதெல்லாம் மக்களை சுரண்டிகொழுக்கும் அதிகாரவர்க்கத்தின் வாடிக்கையான வாய்ச்சவடால்கள்
இலங்கை தொல்லியல்துறை தமிழர்களை இருப்பையே அழிக்கும் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு சக்தியாக செயற்பட்டுவருகிறது. நாம் இறுக்கிக் கண்களை மூடிக்கொண்டு கூஜா தூக்குவோம்.
—–
தமிழ்மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை சர்வதேசமட்டத்தில் பேசுபொருளாக்குவதற்கு கிடைத்த மிகப்பெரிய மேடைதான் ஜெனிவா
காட்டிக்கொடுப்பின் உச்சம் பெருந்தேசியவாதத்திற்குள் தமிழ்த்தேசியத்தைக் கரைப்பதே… கூட்டமைப்பு அதனைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது.

“அபிவிருத்தி ” என்ற சொல் பரவலாக அன்றைய மற்றும் இன்றைய ஒட்டுக்குழுக்களாலும் அரசாங்கத்தாலும் கூறப்படுகிறது. உண்மையில் இந்த அபிவிருத்தி என்றால் என்ன என்று கேட்டால் புதிதாக வீதி, கட்டடம், என்ற வகையிலான பதிலே கிடைக்கிறது.

அபிவிருத்தி என்பது வினைத்திறன் மிகுந்த மனிதவளத்தை உருவாக்குவதே.

வினைத்திறன் மிக்க மனிதர்களை உருவாக்க அவர்களின் மனப்பாங்கு, கல்வி, சிந்தித்து செயற்படும் ஆற்றல், ஆரோக்கியம் ( சுகாதாரம்) போன்றவற்றை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களே தேவை.

ஆனால் நடப்பது என்ன?

யுத்தம் மூலமாக சகல வாழ்வாதாரங்களையும் அழித்து உரிமைகளை பறித்து பூச்சியமாக்கிவிட்டு தங்களிடம் மண்டியிடுபவர்களுக்கு மாத்திரம் சிறிதளவு கிள்ளிக் கொடுக்கப்படுகிறது. அதைப் பெறுபவர்களும் நன்றி விசுவாசத்துடன் அடிமை சேவகம் செய்யத் தயாராகிறார்கள். இந்த அடிமைகளுக்கு தெரிவதில்லை தங்களது வளங்களை அழித்து கொள்ளையிட்டவர்கள் இவர்கள்தானென்று.

அபிவிருத்தி என்ற வகையில் இங்கே எதுவும் நடைபெறவில்லை. மாறாக இருக்கும் மனிதவளத்தின் வினைத்திறன் மேலும் குறைக்கப்படுகிறது.

புரியும் வகையில் சொல்வதானால் தொழில் செய்து சிறப்பாக வாழ்ந்தவனை அடித்து முறித்து தொழில் மூலங்களை பறித்து பட்டினி போட்டுவிட்டு சில மீன் துண்டுகளை “அபிவிருத்தி” என்ற பெயரில் வழங்கி அவனது தொழில் செய்து பிழைக்கும் ஆற்றல் அழிக்கப்படுகிறது.

இதன் மூலமாக தமிழ் மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து மௌனமாக கடந்துசெல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

சமஸ்டியோ, உள்ளக சுயநிர்ணயமோ, எதுவாக இருந்தாலும், ‘நாம் ஒரு இறைமை கொண்ட, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய பூர்வீக தேசிய இனம்’ என்பதன் அடிப்படையில்தான், இதற்கான தீர்வுகளையும் முன்வைக்க முடியும்.
சிங்கள தேசமானது முதலில் இதனை ஏற்றுக்கொள்ளட்டும். இந்த அடிப்படைக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படாமல், எதுவுமே சாத்தியமில்லை.

ஒரு புரட்சியாளனின் சிந்தனைகள் அரசியல் கட்சிகளிடம் போய் முடிவதில்லை. மாறாக அவை போராடும் மக்களிடமே சென்றடைகின்றன. ஒரு இனத்தின் கூட்டு மனவுணர்வில் அப்புரட்சியாளரே மேலோங்கி நிற்பார். இது தமிழீழத்திற்கும் பொருந்தும்.

ஆயுதப் போராட்டம் தவறு, அங்கு ஜனநாயகம் இல்லை என்று சொன்னவர்கள் கூட இன்றைக்கு அவர்கள் இல்லை நாம் எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்கிறோம் என்று ஒப்பாரி வைக்காத குறையாக தொலைக்காட்சியில் வந்து சொல்கிறார்கள். போராட்டம் வீறு கொண்டெழுந்தபோது அதனை அழிப்பதற்கு துணைபோன அற்ப பதர்கள் எந்த முகத்தை வைத்து இப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் அரிதாரம் பூசாத நடிகர்களாகக்கூட இருக்கலாம்.

யார் விரும்பினாலும் எதிர்த்தாலும் இந்த இனத்தின் ஆன்மபலம் புலிகள் மட்டுமே.

தாயகத்திலும் புலத்திலும் இருக்கக்கூடிய தமிழர் தரப்புகள் தமது பிரச்சனைகளை ‘ஒரே குரலில்’ முன்வைக்கும் பக்குவத்தை எட்டவேண்டும்!
வெவ்வேறாகப் பிரிந்து நிற்கிறபோதும் மக்களினதும் தாயக விடுதலையின் நலனையும் கருத்திற்கொண்டேனும் பொதுவான வேலைத்திட்டங்களை இனம்கண்டு ஒன்றிணைந்து வேலைசெய்ய வேண்டும். பேரம்பேசும் வல்லமை கொண்ட தமிழ்த் தலமைத்துவத்தை இனம் காட்டவேண்டிய தேவை எழுந்துள்ளது!

உலக பயங்கரவாதிகளை உள் வாங்கித்தான் எமது விடுதலைப்போராட்டத்தை அழித்தார்கள். இது அறுவடைக்காலம்

கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். எஞ்சியோரில் பெரும்பாலானோர் முன்னாள் தமிழர்கள்.

யாழில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதை இனச்சுத்தீகரிப்பு என்றவரைக் காணவில்லை.

இலங்கைக்கு கவலை தெரிவிக்கும் வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கையில் பயங்கரவாதிகள் ஆட்சியில் இருப்பதை மறைக்கின்றார்கள்.

திரை மறைவுப் போர்களை மட்டுமே நம்புகின்ற கோழைத்தனமான உலக மக்களாட்சி ஆயுதப் புரட்சியைப் பார்த்து அச்சம் கொள்வதைத் தமிழினம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்!

உரிமைகளை மீட்பதற்காக ஆயுதங்களின் உதவியுடன் போராடுகின்ற போராளிகளைக் கொடிய மனிதர்களாகவும்…

இம்மாதிரியான போராளிகளைவிட்டு வெகுதொலைவு விலகி நிற்பவர்களை மிகவும் தூய்மையான மனிதர்களாகவும் தற்போதைய உலகம் உருவகப்படுத்துகிறது!

“தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகப் போராடும்பொழுது அந்தப் போராட்டங்களை ஆயுதங்களினால் தடுத்து நிறுத்துவதற்கு மக்களாட்சி முற்படுமானால் அந்தப் போராட்டக்காரர்களும் கண்டிப்பாக ஆயுதங்களைக் கையிலெடுப்பார்கள்” – இதை எந்த வகையில் தவறென்று கூற முடியும்?

இனத்தின் உரிமைபற்றிப் பேசினால் இனவாதி(Racist)! இனத்தின் தன்னாட்சி உரிமை பற்றிப் பேசினால் வன்கொடுமையாளர்(Terrorist)! இதுதான் வல்லரசு நாடுகளின் கோட்பாடு.

“உணர்விழந்த நீதி போர்க்களத்தை மீளத் திறக்கும்!” தமிழர்கள் விடுதலை கோரிப் போராடினால் “அது வன்கொடுமை(terrorism). போராடாதீர்கள்!” என்கின்றன பொய்யான உலகநாடுகள். ஆனால், இதே உலகநாடுகள் தங்கள் அரசியல், பொருளியல், நிலவியல் நலன் சார்ந்து இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. அழிப்பவன் வன்வலுவைப் பயன்படுத்தும்பொழுது, அரசத்தந்திரம்(Diplomacy), அரசத்தந்திர வழியில் (Diplomatically) என்கிற மாயையில் நாம் மென்வலு பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.

ஈழத்தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாகவே இலங்கையின் புத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழத்தமிழ் மக்களை ‘இலங்கையர்’ என்கின்ற அடையாளத்திற்குள் உட்படுத்துவதே சிங்கள அரசினதும் அதன் அடிவருடிகளினதும் நோக்காகும்.

இறுதித்தோட்டா இருக்கும்வரை களமாடிய மாவீரர்கள்…ஆம் அவர்கள் எமக்காகத்தான் வீழ்ந்தார்கள்!
வித்துடலாகிப்போன தம் தோழர்களின் உடல்களை அரணாய்க்கொண்டு அவர்கள் வீழும்வரை போரிட்டார்கள்.
இறுதித்தோட்டா இருக்கும்வரையிலும் அவர்கள் துப்பாக்கிகள் வெடித்துக்கொண்டேதானிருந்தன..

அவர்களுக்கு அழகான குழந்தைகள் இருந்தன, அன்பான மனைவி கணவன் இருந்தனர். பாசம்கொண்ட உறவுகள் இருந்தன, பத்துமாதம் சுமந்துபெற்ற தாய் தந்தையர் இருந்தனர்,,

ஆயினும் அவர்கள் அனைவரையும் விட இந்த மண்ணையும் மக்களையும் நேசித்தார்கள்.
தங்கள் சாவினை உறுதிசெய்துகொண்டுதான் அவர்கள் இரட்டைவாய்க்கால் கடந்தார்கள்.
முள்ளிவய்க்கால்வரை நம்பிவந்த மக்களை அவர்கள் ஏமாற்ற துணியவில்லை.

இத்தனைக்கும் அவர்கள் மேடைகளில் வீரவசனம் பேசியவர்கள் இல்லை. காடுகரையென ஈழமெல்லாம் பரவியிருந்த களமுனைகளில் கடந்த காலங்களை கழித்தவர்கள். வெற்றி வெற்றியென சென்றவிடமெல்லாம் வெற்றிகளை குவித்தவர்கள். மொத்தமாய் ஒரேயிடத்தில் ஓர்நாளில் ஏன் விதையாகிப்போகவேண்டும்?? நீங்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒருநாள் முயற்சித்திருக்கலாமே ஏன் முயற்சிக்கவில்லையென்று அவர்கள் சந்ததிகள் அவர்களிடம் கேள்விகேட்க இடமளிக்கக்கூடாதென்றுதான் இறுதிக்களத்தை இரட்டைவாய்க்கால் தாண்டி அவர்கள் தெரிவு செய்தார்கள். ஆனந்தபுரம்நோக்கி அணிவகுத்தார்கள்…

கிரேக்க புராணங்கள் கூறிய ஸ்பாட்டன்களின் நிஜவடிவம் எங்கள் போராளிகள். எங்கள் தேசம் மீளவேண்டுமென்பதற்காய் அவர்கள் வீழும்வரை போரிட்டார்கள். காலம் ஒரே சம்பவங்களை வரலாறுகளாய் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனந்தபுரம் எமக்கு ஆனந்தமளிக்கவில்லை ஆயினும் அடுத்த தலைமுறைக்கு அதுதன்னில் ஆயிரம் வீரவரலாறுகளை தாங்கி நிற்கின்றது. எங்கு வீழ்ந்தோமோ அங்கிருந்து எழுவோம். முடிந்துபோனவைகளில் இருந்து முன்னோக்கிச்செல்லும் எம் தலைமுறைகள். அவர்கள் போராடுவார்கள் ஏனெனில் காலம் மீண்டும் மீண்டும் ஒரே வரலாறுகளை அடிக்கடி பிரசவிக்கிறது……

மாயைகளையும் வார்த்தைஜாலங்களையும் ஏமாற்றும் முயற்சிகளையும் தாண்டி, அர்ப்பணிப்புகளை நெஞ்சினில் தாங்கி நேர்மையுடனும் மனச்சாட்சியுடனும் இனத்தின் நலனுக்காய் தொடர்ந்தும் கொள்கை உறுதியுடன் நடப்போம்!
மீண்டெழும் காலம் மறுபடியும் உருவாகும்..மாண்டவர் கனவும் பலிக்கும்.

சிங்கள தேசத்தின் தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், கைதுகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும்.
போராட்டம் மனித உயிர்ப்பின் அற நெறி!
அது பேதங்கள் கடந்து அற மாந்தர்களை ஒன்றிணைக்கின்றது!
வலிகள் தரினும் போராட்டம் இன்பமயமானதே!

– ஈழத்து நிலவன் –