பாக்கிஸ்தான் ஆப்கான் அகதிகளை நாடுகடத்தவேண்டாம்- சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

340 0

அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு இலங்கை அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என சர்வதேச அமைப்புகள் பல கூட்டாகவேண்டுகோள் விடுத்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட பல அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளிற்கு பின்னர்  அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளனர்

அகதிகள் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு குறிப்பிட்ட வீடுகளின் உரிமையாளர்களிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போதுள்ள 1600 அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களில் 1200 பேர் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவர்கள் தாங்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் அச்சம் காரணமாக தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

ஈரானை சேர்ந்த அகதிகளும் அச்சமடைந்துள்ளனர்,கிறிஸ்தவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் சர்வதேசமனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகளின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களில் பாக்கிஸ்தானின் அகமடி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களும்,ஆப்கானிஸ்தானின்  சியா ஹசாராஸ் சமூகத்தவர்களும் உள்ளனர்,இவர்கள் தங்கள் நாடுகளில் காணப்படும் மத இன ஒடுக்குமுறைகள் காரணமாக தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் அவர்களது உயிருக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்துள்ள இடங்களிற்கு அவர்கள் திருப்பி அனுப்பபடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது சர்வதேச சட்டகொள்கைக்கு முரணான விடயமாக அமையும் எனவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் இதற்காக போதியளவு சட்ட அமுலாக்கல் அதிகாரிகளை பயன்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள சர்வதேச அமைப்புகள் அவர்களிற்கு போதுமான அடிப்படை வசதிகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.