பொய் சொல்வதில் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதற்கு திமுக தலைவர் தான் மிகவும் பொருத்தமானவர் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அவரை வரவேற்க அ.தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நடந்து சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அங்குள்ள சாலையோர கடைகளில் வியாபாரம், காய்கறிகளின் விலை நிலவரம் போன்றவற்றை கேட்டார். நானும் அடிப்படையில் விவசாயிதான் என்று அவர்களிடம் தெரிவித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த வேனில் நின்று அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொது இடங்களில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார். அவரது பேச்சு அநாகரீகமானது. அ.தி.மு.க. அரசு அறிவித்த மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் கட்சி தி.மு.க. என்பது அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்மை செய்கிற திட்டத்தை தடுக்கிற தி.மு.க.விற்கு உரிய பாடத்தை இடைத்தேர்தல் மூலம் மக்கள் புகட்ட வேண்டும்.
ஜெயலலிதா காட்டிய வழியில் நடைபெறும் அ.தி.மு.க. அரசு மக்கள் சேவையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் கடந்த இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் ஏ.கே. போஸ் போட்டியிட்டார். அவரது வேட்புமனு படிவத்தில் ஜெயலலிதா வைத்த கைரேகை தொடர்பாக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகையில் தவறு என்று நீதிமன்றம் சொல்லவில்லை. அதனை வாங்கிய முறை தான் சரியில்லை என சொல்லியிருக்கிறது. ஆனால் இதனை ஸ்டாலின் திரித்து பேசி வருகிறார்.

மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வினரும் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. நான் என்றும் அ.தி.மு.க. தொண்டன் தான். மக்கள் தான் முதல்-அமைச்சர். அவர்களின் கஷ்ட-நஷ்டங்களை நன்கு அறிந்த விவசாயி நான்.
மின்சாரத்தையும், மக்கள் நலத்திட்டங்களையும் தடையில்லாமல் வழங்கி மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளோம். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

