ஒட்டப்பிடாரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

325 0

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். 

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்களிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மோகன், தி.மு.க. வேட்பாளராக சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளராக சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்ய வேட்பாளராக காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அகல்யா ஆகியோர் உள்பட 15 பேர் போட்டியிடுகின்றனர். தற்போது அவர்கள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தங்களின் முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். இதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை கார் மூலம் ஒட்டப்பிடாரம் வருகிறார்.

மாலை 5 மணிக்கு ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர் 5.40 மணிக்கு புதியம்புத்தூர், 6.20 மணிக்கு தருவைகுளம், இரவு 7 மணிக்கு தாளமுத்துநகர், 8 மணிக்கு முத்தம்மாள் காலனி, 8.45 மணிக்கு பாரதிநகர், 9.20 மணிக்கு புதுக்கோட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார்.

அவர் வருகிற 12-ந் தேதி 2-ம் கட்டமாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.