டிரம்பிற்கு எதிராக பெண்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு

321 0

coltkn-10-14-fr-04172530075_4883294_13102016_mss_cmyஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், பெண்கள் மீது முறைகேடான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளார்.

தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், முத்தமிட்டதாகவும் அல்லது மோசமாக நடந்து கொண்டதாகவும் பல பெண்களின் குற்றச்சாட்டுகளும் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தமது அங்கங்களை தொடுவது மற்றும் முத்தமிட்டது பற்றி இரு பெண்கள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலதிபரான டிரம்ப் தம்மை வலுக்கட்டாயமாக முத்தமிட்டது பற்றிய தனது தனிப்பட்ட அனுபவத்தை ‘பீப்பல்’ சஞ்சிகையின் செய்தியாளர் முதல் முறை வெளிப்படுத்தி இருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்பின் பிரசாரக் குழு முழுமையாக நிராகரித்திருப்பதோடு, ஊடகங்களின் செய்திகள் ‘அவதூறானது’ என்று விபரித்துள்ளது.

இது பற்றி செய்தி வெளியிட்ட நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கடிதம் அனுப்பி இருக்கும் டிரம்ப் பிரசாரக் குழு, அந்த பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது. தம்மை தோற்கடிக்கும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமது கட்டுரையில் உறுதியாக இருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் அம்பலமான 2005 ஆம் ஆண்டு வீடியோ ஒன்றில், பெண்களை தொடுவது பற்றி டிரம்ப் ஆபாசமாக உரையாடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

எனினும் அந்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப், அந்த வீடியோவில் இருப்பது சில ஆண்கள் தனிப்பட்ட நிலையில் இருக்கும்போது பேசும் பேச்சுக்கள்தான் என்று வலியுறுத்தினார்

எனினும் இந்த விவகாரத்தை அடுத்து குடியரசு கட்சியின், பாராளுமன்ற கீழ்சபை சபாநாயகர் போல் ரயான் உட்பட பல அரசியல்வாதிகளும், டிரம்பை விட்டு விலகிக் கொண்டனர்.