
மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை பறிகொடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, அல்-ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டனர்.
அதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 26-ம் தேதியன்று நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்காக 6 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதே சமயம் இந்த ஜாமீன் காலத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஜாமீன் காலம் வரும் 7-ந் தேதி நிறைவடைகிறது. எனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெறும் வகையில் அவரது ஜாமீனை நீட்டிக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதையும் அனுமதிக்க முடியாது என்று 3 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

