ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது- சந்திரிகா

344 0

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் தொடர்பில் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போர்க்குற்றம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டிய கோட்டாபய, இரட்டை குடியுரிமையை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு இலங்கைக்கும் மாறி மாறி பயணம் மேற்கொண்டு இருக்கின்றார்.

அத்துடன் நாட்டு மக்களிடமும் போலி வேடம் போட்டு, தன்னை நல்லவராக அவர் காட்டிக்கொண்டிருக்கின்றார். ஆனால் எம்மை பொறுத்தவரை போர்க்குற்றம் புரிந்தவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

அந்தவகையில் பன்னாட்டு அமைப்புக்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என சந்திரிகா தெரிவித்துள்ளார்.