புதுவையில் 30 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன

268 0

201610110916517494_narayanaswamy-information-30-foreign-companies-to-start_secvpfபுதுவையில் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள பாண்டெக்ஸ் விற்பனை அரங்கில் தீபாவளி கைத்தறி கண்காட்சி திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். பிப்டிக் சேர்மன் சிவா முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் சிவக்குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தீபாவளி கைத்தறி கண்காட்சியை திறந்து வைத்தார்.

புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது முதல் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் இடைக்கால பட்ஜெட்டையே கடந்த கால ஆட்சியாளர்களால் தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மீனவர், அரசு ஊழியர்கள், மகளிர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை ஏற்படும் வகையில் நிதி பெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்.

இந்த பட்ஜெட் மூலம் விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம் போன்ற துறைகள் முன்னேற்றமடைய தேவையான திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்த 120 நாட்களில் செயல்படுத்தி உள்ளோம்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் புதுவையில் செயின் பறிப்பு, நில அபகரிப்பு, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டுவது, கடத்தல் போன்ற சம்பவங்களால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. இதனால் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை. இதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். புதுவையில் ரவுடிகளுக்கு இடமில்லை. ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். காந்தியடிகள் கண்ட கனவை நாங்கள் நனவாக்கி உள்ளோம். இன்று புதுச்சேரியில் இரவு 12 மணிக்கு பெண்கள் தனியாக செல்கிறார்கள்.

புதுவையில் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அவர்கள் இன்னும் 4 மாதத்தில் புதுவையில் தொழில் தொடங்க வருவதாக தெரிவித்துள்ளனர்.

சித்தர் பூமியான புதுவை மாநிலத்தை புதுடெல்லியைவிட முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து பணியாற்றிட வேண்டும். அரசுத்துறைகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை திணித்து அவர்களின் குடும்பங்கள் இன்று சம்பளம் இல்லாமல் அல்லல்படுவதற்கு யார் காரணம். சிந்தித்து பாருங்கள்.

நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களை லாபத்தில் இயக்க 6 மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் லாபத்தில் இயக்காவிட்டால் அந்த நிறுவனத்தை அரசு நிச்சயமாக மூடிவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.