ஆட்சியின் சாதனைகளை கூற முடியாதது தான் பாஜக,அதிமுக கூட்டணி – முக ஸ்டாலின்

281 0

கரூரில் உள்ள திருமாநிலையூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சியின் சாதனைகளை கூறமுடியாத பாஜக-அதிமுக கூட்டணி என கூறியுள்ளார். 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கரூரில் உள்ள திருமாநிலையூரில் நடைபெற்ற பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து  பேசியதாவது:

இந்த கரூர் தொகுதியிலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்  தம்பிதுரை போட்டியிடுகிறார். இதே தம்பிதுரை, பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராக எப்படியெல்லாம் குற்றம் சாட்டி பேசினார் என நன்றாகவே தெரியும். இந்த அதிமுக அரசு, ஜிஎஸ்டி வரியில் பங்கு கேட்பதில் மாநில அரசுகள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளது. 

கரூர் மக்கள் தம்பிதுரைக்கு தகுந்த பாடம் கற்றுத்தர வேண்டும். வாக்காளர்களை மதிக்காமல் செயல்படுபவர் அதிமுக வேட்பாளர் தம்பி துரை. இது 2 தினங்களுக்கு முன், வாக்காளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அலட்சியமாக பதிலளிக்கும் போதே உறுதியானது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்த்து 8 வருடங்கள் அதிமுக ஆட்சியில் இருக்கிறது. 

ஆட்சியிலே செய்த சாதனைகளை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? எனவே நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்கள் துணை நிற்க வேண்டும். மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். காங்கிரஸ்  தான் நீட் கொண்டு வந்தது என எதிர்கட்சிகள்  கூறுகிறார்கள்.  ஆனால் திமுக அதனை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. 

ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாதவர்கள் தான் இந்த பாஜக- அதிமுக கூட்டணி. அடுத்த ஆண்டுகான  நீட் தேர்வுக்கு வேலை நடைபெறுகிறது. ஆனால் நீட்டிற்கு விதிவிலக்கு என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? 

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி யை எளிமையாக்குவோம், பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி செய்துள்ளது. மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும்  ராகுல் காந்தி சொல்லியுள்ளார்.  

இவ்வாறு அவர் பேசினார்.