ஜெயலலிதாவை பழித்தவர்களுடன் கூட்டணி அமைப்பதா?- அ.தி.மு.க.வுக்கு தினகரன் கண்டனம்!

296 0

ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்து உள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை. நான் தனியாக கட்சி தொடங்கினால் நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய உரிமை போராட்டத்தை நடத்த முடியாது என்ற காரணத்தால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தேசிய கூட்டுறவு, வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழய் கிணறுகள் அமைக்கப்படும்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலகங்களில் அனைத்து சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும்.

ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று பழித்து பேசியவர்களுடன், தற்போது அ.தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர். அப்போது 37 தொகுதிகளில் வெற்றியை அளித்து, மோடி வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

ஆனால், தற்போது மோடி எங்களுக்கு தந்தை (டாடி) என அ.தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். மோடியல்ல யார் வந்தாலும் இனி இவர்களை காப்பாற்ற முடியாது. இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சின்னம் வழங்குவதில் இடையூறுகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாம் யாரையும் நாடாமல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்று, பொதுசின்னமாக பரிசு பெட்டகத்தை பெற்றுள்ளோம். இந்த பரிசு பெட்டி அவர்களின் பணப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

அ.ம.மு.க.வை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.