பீகாரில் ரிக்‌ஷா ஓட்டிய மத்திய மந்திரி!

321 0

பீகாரில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி ராம் கிரிபால் யாதவ் பொது மக்கள் மத்தியில் ரிக்‌ஷா ஓட்டிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள பிரபல காந்தி மைதானத்தில் நேற்று காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களின் கண்களில் ஒரு மத்திய மந்திரி ரிக்‌ஷா ஓட்டிய காட்சி தென்பட்டது. பக்கத்து தொகுதியான பாடலிபுத்ராவில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம் கிரிபால் யாதவ் தான் அவர். டிசர்ட், டிராக் பேண்ட் அணிந்தபடி மைதானத்தை சுற்றியிருந்த சாலையில் நயமாக ரிக்‌ஷாவை ஓட்டிக் கொண்டிருந்தார். பலர் இதனை தங்கள் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த அவர் பா.ஜனதாவில் ஐக்கியமாகி கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மத்திய மந்திரி ஆனார். ரிக்‌ஷா ஓட்டியது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் 30 வருடங்களாக தொடர்ந்து காந்தி மைதானம் வந்து சில உடற்பயிற்சிகள் செய்வது வழக்கம். அதுபோல காலையில் வந்தபோது ஒரு ரிக்‌ஷா ஓட்டுபவர் என்னிடம் வந்து, சார் நீங்கள் எனது ரிக்‌ஷாவில் பயணம் செய்து என்னை கவுரவப்படுத்த மாட்டீர்களா? என்று பாசமாக கேட்டார். அதற்கென்ன, எனக்கு ரிக்‌ஷா ஓட்டத்தெரியும், நீ நகர்ந்துகொள் என்று கூறிவிட்டு ரிக்‌ஷாவை ஓட்டினேன். வேறு ஒன்றுமில்லை” என்று யதேச்சையாக கூறினார்.

பாடலிபுத்ரா தொகுதியில் தனது அரசியல் வழிகாட்டியான லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதியை எதிர்த்து மீண்டும் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.