கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி – துமிந்த

254 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறியோரையும் பதவிநீக்கப்பட்ட அமைப்பாளர்களையும் மீண்டும் இணைக்க முயற்சிகள் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

வரவு – செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் சுதந்திர கட்சி எதிர்த்து வாக்களிக்க வேண்டும். அதன் பின்னரே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து ஆராய முடியும் என்று ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றமையாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களமிறக்க அந்த கட்சி இணங்காததாலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான இரு உத்தியோக பூர்வ கலந்துரையாடல்கள் நிறைவடைந்திருந்தாலும், அவற்றின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட விடயங்களில் அவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. 

எனவே எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படுமானால், அதற்காக கட்சியை மேலும் பலப்படுத்துவது அவசியமாகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இதன் காரணமாகவே சு.க மீது அதிருப்தியடைந்துள்ள உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.