வடக்கு ஆளுநர் நாட்டாமை போல நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு

292 0

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பெயரில்,  கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்படவில்லை எனத் தெரிவித்து வழக்கு தொடுநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் சந்தேகநபரின் சார்பில் சட்டத்தரணிகள் திருமதி.எஸ்.விஜயராணி, எஸ்.ரி.அருச்சுனா, திருமதி.சர்மா ஆகியோரின் அனுசரணையுடன் முன்னிலையாகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா முறையீடு ஒன்றைத் தெரிவித்து சமர்ப்பணங்களைச் செய்தார்.

இதன்போதே சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆளுநர் மீது மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீதிமன்றின் உத்தரவின் பெயரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையே உணவகம் பூட்டப்பட்டது என்றும் தெரிவித்த சட்டத்தரணி, அன்றிரவு 8 மணியளவில் சில பொலிஸ் அதிகாரிகள் உணவகத்திற்கு வந்தார்கள் என்றும் அவர்களைத் தொடர்ந்து வட.மாகாண ஆளுநர் அங்கு வருகைதந்தார் என்றும் குறிப்பிட்டார்.

சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த உணவகத்தில் ஆளுநர் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டார் என்றும் ஒரு காட்டுத் தர்பார் அங்கு அவரால் நடத்தப்பட்டதென்றும் குற்றஞ்சாட்டிய சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஆளுநரின் நடத்தை சட்டவிரோதமானது மாத்திரமன்றி இந்நீதிமன்றின் அதிகார எல்லைக்குள் ஊடுருவிய ஓர் பாரதூரமான விவகாரம் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதாகவும் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்று ஆளுநரின் நடத்தை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அவர் விண்ணப்பித்தார்.

இதனையடுத்து எதிர்வரும் 5ஆம் திகதி வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை குறித்த வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த உணவகத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரின் சுகாதார ஏற்பாடுகளை நிறைவுசெய்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த உணவகம் இயங்கக்கூடாது என்றும் நீதவான் உத்தரவிட்டார்.