அமெரிக்க போர் விமானங்கள் அவசரமாக தரை இறக்கம் – பின்னணி என்ன?

173 0

அமெரிக்க போர் விமானங்கள் அவசரமாக தரை இறக்கிய காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் ‘பி-1பி’ லேன்சர் போர் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும்படி அமெரிக்க விமானப்படை உலகளாவிய தாக்குதல் கட்டளை மையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்த ஆண்டில் இப்படி உத்தரவிடப்பட்டது, இது இரண்டாவது முறை என சொல்லப்படுகிறது.

இந்த விமானங்களில் 4 இருக்கைகள் இருக்கும். விமானிக்கு ஒரு இருக்கை, இணை விமானிக்கு ஒரு இருக்கை, அவர்களுக்கு பின்னால் இரு இருக்கைகள் இருக்கும். அதில் ஆயுத அமைப்பு அதிகாரிகள் அமர்ந்திருப்பர்.

இந்த நிலையில், சோதனை நடத்தப்பட்ட பி-1பி லேன்சர் விமானத்தின் இருக்கையில் பாராசூட் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்தே, ஒவ்வொரு விமானத்திலும் சோதனை நடத்த ஏதுவாகத்தான் இந்த ரக போர் விமானங்கள் அனைத்தையும் பத்திரமாக தரை இறங்கும்படி உத்தரவிடப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் எந்த விமானத்திலாவது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானம் போல பிரச்சினை இருந்தால் அதைக் கண்டறிந்து சரி செய்த பின்னர் வழக்கம்போல பறக்க அனுமதிக்கப்படும் என அமெரிக்க விமானப்படை உலகளாவிய தாக்குதல் கட்டளை மைய தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இந்த விமானம், நீண்ட தொலைவுக்கு ஒலியின் வேகத்தை விட வேகமாக பறக்கிற ஆற்றல் வாய்ந்த ‘சூப்பர்சோனிக்’ மரபு சார் விமானம், அமெரிக்க விமானப்படையில் 1985-ம் ஆண்டு சேர்ந்து இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.