தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமர், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்கள் – கார்த்தி சிதம்பரம்

277 0

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமராகவும், மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் ஆவார்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிக்கான வேட்பாளர்கள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்டனர்.

இதில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (நேற்று) மாலை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

அதன்படி நேற்று மாலை சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் கார் மூலம் சிவகங்கை தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

வழியில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சாலையில் பைரவர் கோவிலில் வழிபாடு நடத்தினர். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். அதேபோல் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தொழில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை. எனவே தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.வ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து அவர் சிவகங்கை புறப்பட்டு சென்றார்.