எனது வளர்ச்சியை ப.சிதம்பரம் தடுத்து விட்டார்: சுதர்சனநாச்சியப்பன் குற்றச்சாட்டு

250 0

ப.சிதம்பரம் எனது வளர்ச்சியை தடுத்து விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார். 

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுதர்சனநாச்சியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு நிகழ்வு ஏற்பட்டு உள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்சினைக்கு இது காரணமாக அமைந்துவிடுமோ? என்று தோன்றுகிறது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்து உள்ளார்.

நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன்.

ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் ப.சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளது. ஒரு குற்றவாளியாக உள்ளதால் கோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை?. கோர்ட்டுக்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது க‌‌ஷ்டமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.