வவுனியாவில் காணிப் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு

311 0

வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையினால் செட்டிகுளம், வீரபுரம் பிரதேச காணிப் பிணக்குகள் 19 இற்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று தெரிவிக்கையில்,

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள காணிப்பிணக்குகள் தொடர்பாக 88 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் முதல்கட்டமாக நேற்று சனிக்கிழமை 40 பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் 21 பேர் சமூகமளித்திருந்தனர். அவர்கள் அனைவரும் வீரபுரம் பகுதியில் உள்ள காணிப்பிணக்குகள் தொடர்பாகவே முறைப்பாடு செய்திருந்தனர். 

பிணக்காளர்களான பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் ஆகியோருடன் மூவர் அடங்கிய மத்தியஸ்தர் குழாம்  மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைவாக 19 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. அத்துடன் 09 புதிய முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.  

இந்நிலையில் செட்டிகுளம் காணிப் பிணக்குகளை துரித கதியில் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், குடியேற்ற உத்தியோகத்தர் பா.குகாசினி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். 

அத்துடன் செட்டிகுளம் பகுதி காணிப் பிணக்குகள் தொடர்பான அடுத்த கட்ட அமர்வு ஏப்பரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் எனத் தெரிவித்தார்.