உள்நாட்டு நீதி முறையை மாத்திரம் ஏற்று இறையாண்மையை பாதுகாத்துள்ளோம் –ரணில்

253 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்க மறுத்ததன் மூலம், தற்போதைய அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67ஆவது ஆண்டு நினைவு நாள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜெனீவா அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், அனைத்துலக சமூகம் உள்நாட்டு நீதி முறையை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் எனவே, போர்க்குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2009இல் அத்தகைய நீதிமன்றத்தை அமைக்க அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் இணங்கியிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர், போரின்போது தவறிழைத்த இலங்கை படையினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக உள்ளூர் சட்ட பொறிமுறைகளின் மூலம், தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

படையினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாக, ஐ.நா. அமைதிப்படைக்கு தற்போதைய அரசாங்கம் அனுப்பிக்கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் ஒரு முழு பிரிகேட் படையினரை மாலிக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையும், இராணுவத் தளபதியையும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நாட்டின் போர் வீரர்களால், எந்த தடையும் இன்றி வெளிநாடுகளுக்கு செல்ல முடிகிறது. ஐ.நா.வில் கூட பணியாற்ற முடிகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.