இனத்தை இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை – கோட்டா

207 0

நாட்டின் எந்தவொரு இனத்தையும் இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை என்றும் தீவிரவாதத்தை வேரறுப்பதே தமது பிரதான நோக்கமாக இருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்கால அரசாங்கங்களை பலவீனப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்று, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, பொருளாதார ரீதியாகவும் நாட்டை முன்னேற்றினார்.

நாம், ஒரு இனத்தை இலக்கு வைத்து அன்று யுத்தத்தை நடத்தவில்லை. மாறாக, எமக்கு நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் குறுகிய காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை செய்தோம்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த புலிகளின் 13 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வெறும் மூன்றே வருடங்களில் புனர்வாழ்வளித்து, சமூகமயப்படுத்தினோம்.

அத்தோடு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தோம். யுத்தம் இடம்பெற்ற அனைத்து பகுதிகளையும் நாம் அபிவிருத்தி செய்தோம்.

நாம் 2015ஆம் ஆண்டு நாட்டை இந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது, நாடு சிறப்பான நிலையிலேயே இருந்தது. ஆனால், தற்போது அபிவிருத்திகளை எம்மால் காணமுடியாமல் உள்ளது.

இப்படியான அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பினால், நிச்சயமாக எதிர்காலத்தில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியாது.

இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாட்டுக்கு அது பாதிப்பாகவே அமையும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.