நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறப்பு!

266 0

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அமைதி தவழ்ந்து வந்த நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்கரவாதிகள் கடந்த 15-ந்தேதி துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரை கொன்று குவித்தனர்.
இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமும் அடைந்தனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் அல்நூர் மசூதி பழுது பார்த்து, வர்ணம் பூசப்பட்ட நிலையில் இஸ்லாமிய மக்களின் தொழுகைக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரம் பேர் நகரில் அமைதிப்பேரணி நடத்தி, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
சிறு சிறு குழுக்களாக சென்று தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 வயது சிறுவனின் தந்தையான ஏடன் திரியே என்பவர், அல்நூர் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வெளியே வந்தார். அப்போது அவர், “நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டேன்” என கூறினார். மசூதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லின்உட் மஸ்ஜித் மசூதியும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்கும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.