இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸுக்கு அதிகாரங்கள் அதிகரிப்பு

188 0

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள்  வழங்கப்பட்டுள்ளன.   

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி¸ சிலாபம் பெருந்தோட்ட கம்பனி¸ கல்ஓயா சீனி தொழிற்சாலை¸ பெருந்தோட்ட முகாமைத்தவ கண்காணிப்புப் பிரிவு¸ பெருந்தோட்ட உட்கட்மைப்புகளை உள்ளடக்கிய கண்காணிப்பு பிரிவு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் நேரடி சிபாரிசுக்கும் மேற்பார்வைக்கும் கீழ், இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுவாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டு இவ்வாறு வர்த்தமானி மூலம், அமைச்சரவை அந்தஸ்த்துக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  பெருந்தோட்ட கைத்தொழில்  அமைச்சில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது, மேற்படி நிறுவனங்களால் எதிர்காலத்தில்   முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், கலந்துரையாடப்பட்டது.