திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

331 0

பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார்.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களையும் ஆதரித்தும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயணமாக கிளம்பிய ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து காலை 10 மணிக்கு நாகை, திருவாரூர் தொகுதிகளை உள்ளடக்கிய திருவாரூர் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடையே வாக்கு சேரிப்பில் ஈடுபடுகிறார்.
இன்று துவங்கிய ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 6-ந் தேதி வரை இடைவெளியின்றி தெடர்ந்து 18 நாட்கள் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.