ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று! ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பிப்பார் !

297 0
U.N. logo pattern a press conference background at the United Nations headquarters, Tuesday, Sept. 3, 2013. (AP Photo/Bebeto Matthews)

ஐக்கியநாடுகள் மனித உரிமை   பேரவையின்  40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது.  ஜெனிவா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய தினம்    இலங்கை  தொடர்பான விவாதம்  பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது. 

இன்று காலை  ஜெனிவா நேரப்படி 9 மணியளவில்  இலங்கை  தொடர்பான விவகாரம்  எடுக்கப்படவுள்ளது. முதலில்    இலங்கை தொடர்பான  அறிக்கையை   ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட  பின்னர் அது மீதான  விவாதம்  நடைபெறவுள்ளது. 

இதன்போது உரையாற்றவுள்ள கனடா பிரிட்டன் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  சர்வதேச நாடுகளின்  பிரதிநிதிகளும்  சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இன்றைய  இலங்கை குறித்த விவாதத்துக்கு தயாராகி வருகின்றனர். 

சர்வதேச மனித  உரிமை கண்காணிப்பகம்  சர்வதேச மன்னிப்புச்சபை  உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதன்போது   உரையாற்றவுள்ளனர்.  அதாவது  கடந்த  10 வருடகாலத்தில்  நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில்   இலங்கை  போதுமான முன்னேற்றத்தை      வெளிக்காட்டவில்லை என்று இதன்போது  சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள்   அதிருப்தி தெரிவிக்கவுள்ளனர்.  

அத்துடன் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில்  வலியுறுத்தவுள்ளனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நீதியை நிலைநாட்டுவதற்கான  பொறுப்புக்கூறல் பொறிமுறையில்   சர்வதேச  நீதிபதிகள்  உள்ளடக்கப்படவேண்டுமென்ற  கோரிக்கை  இன்றைய தினம்   வலுவான முறையில் சர்வதேச நாடுகள் மற்றும்  மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளினால்  வலியுறுத்தப்படவுள்ளது. 

இலங்கையின் சார்பிலும் அரசாங்கத்தின்  தூதுக்குழுவினர் இந்த   விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.      வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன,  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம,  வடக்கு ஆளுநர்  சுரேன் ராகவன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் இந்த    இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.   விசேடமான இன்றைய விவாதத்தில் அரசாங்கம் சார்பில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உரையாற்றுவார் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடந்தமாதம் 25 ஆம்திகதி ஆரம்பமான  ஐ.நா. மனித  உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி   நிறைவடையவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை குறித்த அறிக்கையை  உத்தியோகபூர்வமாக வெ ளியிடவுள்ள நிலையிலும் அவர் ஏற்கனவே  அதனை    வெ ளியிட்டுள்ளார். அதில்   மிகவும் காரசாரமான  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம்  இலங்கையில் நிறுவப்படவேண்டும்  என்பது உள்ளிட்ட பல  பரிந்துரைகள்  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்  மிச்சேல் பச்லட்டின் அறிக்கையில்  முன்வைக்கப்பட்டுள்ளன.