அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்- இல.கணேசன் பேட்டி

224 0

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் திருச்சி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, கரூர், சிதம்பரம் (தனி) உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 
இதையடுத்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல், இரண்டொரு நாளில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மூலம் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழகத்தில் 5 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டாலும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பா.ஜ.க தொண்டர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்.
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரது நோக்கமும் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதே. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு கவலைக்குரிய பிரச்சினை தான் என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்து, அத்தொகுதியில் மக்களிடம் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.