சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

327 0

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் – கட்டடங்களின் மதில்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார்.

விளம்பர சுவரொட்டிகளை விளம்பரப் பலகைகளில் மட்டுமே ஒட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மேலதிகமாக விளம்பரப் பலகைகள் தேவைப்படுவோர் விண்ணப்பத்தால் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சினிமா திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமது விளம்பரங்களை பொது மதில்கள், பொதுச் சுவர்கள், வீட்டுச் சுவர்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களின் சுவர்களில் ஒட்டினால் (காட்சிப்படுத்தினால்)  அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாநகரசபையின் அறிவுறுத்தலை உரியோர்களுக்கு மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். 

விளம்பரங்களை ஒட்டுவோர் தமது விளம்பரங்களை உரிய விளம்பரப் பலகையில் மாத்திரம் ஒட்ட முடியும் என்பதுடன், தங்களின் விளம்பரங்களுக்கு மேலதிக விளம்பரப்பலகை தேவையெனில் மாநகரசபையில் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான இட ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்பதை தெரியப்படுத்துகின்றேன்.

வேறு எந்த பொது இடங்களிலும் விளம்பரங்களை ஒட்டாது மாநகரின் மாண்பையும், அழகையும் பேணிப்பாதுகாத்து சுத்தமான பசுமை மாநகராக உருவாக்குவதற்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்புக்களை  வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.