ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கொண்டுவரும் பிரேரணைக்கு மீண்டும் இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்துள்ள தீர்மானம் இந்த நாட்டினை பாரிய அளவில் பாதிக்கும் என சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்த பிரேரணையில் நாட்டின் பாதுகாப்பு குறித்தும், அரசியல் அமைப்பு குறித்தும், கலப்பு நீதிமன்றம் குறித்தும் பாரதூரமான நிபந்தனைகள் உள்வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில்இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தொலைத்தொடர்புகள் ,வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


