தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்

284 0

201610070958151848_tamilisai-soundararajan-says-dmk-stalin-order-the-mps-to_secvpfகாவிரி பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்குரிய காவிரி நீரை பெற்றுதருவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்புதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. அங்கு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. எனவே தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் அவர்களிடம் பேசி காவிரி நீரை பெற்றுதர வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் சந்திக்க உள்ளோம். காவிரி பிரச்சனையில் அ.தி.மு.க. எம்.பி.க்களை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய சொல்லி உள்ளார்.

முதலில் தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அப்படி சொல்லி விட்டு இன்று நடக்கும் உண்ணாவிரதத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருந்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும். காவிரி பிரச்சனை அரசியலாக்கப்பட்டு வருகிறது.

தென்தமிழகக்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடிபட்டு வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர் தாக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்ததை பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்று விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.