அமெரிக்காவில் காரில் பெண் கடத்தல்இந்திய வம்சாவளி வாலிபர் குற்றவாளி

35 0

அமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் நகரில் இருந்து வொயிட் பிலைன்ஸ் நகருக்கு பெண் பயணி ஒருவரை தனது வாடகை காரில் அழைத்து சென்றார்.
இந்த பயணத்தின் போது அந்த பெண் பயணி தூங்கிவிட்டதாக தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஹர்பீர் பார்மர், அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கில் அந்த பெண் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 100 கி.மீ தூரத்துக்கு காரை ஓட்டி சென்றார்.
தூக்கத்தில் இருந்து விழித்த பின்னர் தான் அபாயத்தில் இருப்பதை உணர்ந்த அந்த பெண் போலீஸ் நிலையத்துக்கு செல்லும்படி ஹர்பீர் பார்மரிடம் கூறினார். ஆனால் அவர் அந்த பெண்ணை அங்குள்ள நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து, அந்த பெண் ஹர்பீர் பார்மர், தன்னை கடத்தி சென்றதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக ஹர்பீர் பார்மர் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் ஹர்பீர் பார்மர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளி என கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
அவரின் தண்டனை விவரம் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பீர் பார்மருக்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.