ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019

508 0

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்,  பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கார்ஜ் லெ கோனெஸ் பகுதியில் இடம்பெறவுள்ளது. இம்முறை ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வுக்கு வாய்ப்பாட்டில் இரண்டு மாணவிகளும் நடனத்தில் மூன்று மாணவிகளும் தோற்றுகின்றனர்.பிரான்சில் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு செயன்முறைத் தேர்வு என்பவற்றை நிறைவு செய்தவர்களாக இருப்பதுடன் ஆற்றுகைவெளிப்பாட்டுத் தேர்வை நிறைவுசெய்து ஆசிரியர் தரத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பல மாணவ மாணவியர்கள் ஆசிரியர் தரத்திற்குத் தேர்வாகி இன்று அவர்களுடைய மாணவர்களே 7 ஆவது தரத்தை எட்டும் நிலையில் உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று வன்னிமயில், இசைவேள்வி போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் சிறப்பாக தமது ஆற்றல்களை வெளிப்படுத்தவதற்கும்  இந்த எழுத்துத் தேர்வுகள், செயன்முறைத் தேர்வுகள், ஆற்றுகைவெளிப்பாட்டுத்தேர்வுகள், கலைப் பாடத்திட்டம் போன்றவைகளும் காரணமாக அமைந்துள்ளதாக அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத் தொடர்பாளரும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயலாளருமான திரு. ஜே.காணிக்கைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன், இந்த ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுள்ளார். (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)