ஒரேநாளில் உருவாகிவிடவில்லை விக்னேஸ்வரன்! – புகழேந்தி தங்கராஜ்

370 0

1100270833untitled-1தமிழினப்படுகொலையை மூடிமறைக்கிற இலங்கையின் மோசடியைத் தோலுரிக்கும் நடவடிக்கைகளில் எழுக தமிழ் – பேரணி இன்னொரு மைல்கல். நல்லிணக்க முகமூடிக்குள் இனவெறி மறைத்துப் புன்னகைக்கிற மைத்திரிகள் அவர்களைத் தூக்கிச் சுமக்கிற சமந்தகர்கள் கள்ளப்புத்தன் ராஜபக்சவின் கைத்தடிகள் – என்று அத்தனைப் பேரும் விக்னேஸ்வரன் மீது பாய்வதைப் பார்க்கிறபோதுதான் யாழ் பேரணியின் மகத்தான வெற்றி உறைக்கிறது நமக்கு!

இன்று தங்கள் சொந்தத் தாய்மண்ணில் அஞ்சிநடுங்கியபடியே வாழ்கிற எங்கள் ஈழத்து உறவுகள் ஏழு ஆண்டுகளுக்கு முன் புழு பூச்சியைப் போன்று நசுக்கப்பட்டவர்கள். ராஜபக்சவின் முகமூடி என்பதை அறியாமல் மைத்திரியை நம்பியவர்கள். சுற்றிலும் நீடிக்கும் ராணுவமுற்றுகையால் முடக்கப்பட்டிருப்பவர்கள். ‘உரிமை நீதி என்றெல்லாம் உளறினால் உள்ளதும் போய்விடும்’ என்கிற நைச்சியமான அச்சுறுத்தலால் தடுமாறுகிறவர்கள்.

விதியை நொந்தபடி நகர்கிற எங்கள் உறவுகள் உரிமையும் நீதியும் கேட்கிற ஒரு பேரணியில் கலந்துகொள்கிற வாய்ப்பேயில்லை – என்றுதான் கடைசி நொடிவரை கணிக்கப்பட்டது! அந்தக் கணிப்பைத் தகர்த்துத்தான் விக்னேஸ்வரன் என்கிற அறிவும் துணிவும் தெளிவும் மிக்க ஒரு மனிதரின் தலைமையில் யாழ்வெளியில் திரண்டிருக்கிறார்கள் எமது ஈழத்து உறவுகள்…! பல்லாயிரக் கணக்கில் திரண்டதுடன் நில்லாது தங்களது உள்ளக் குமுறலைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள்.

அரைக்க அரைக்க அரைக்கத்தான் மணக்கும் சந்தனம்
இரைக்க இரைக்க இரைக்கத்தான் ஊறும் கிணற்று நீர்
ஒடிக்க ஒடிக்க ஒடிக்கத்தான் முருங்கை வளர்ந்திடும்…
என்பது (சென்னை) பாலர் கல்வி நிலையத்தின் முதன்மைப் பாடல். இதுதான் நடந்திருக்கிறது வணங்கா மண்ணான வன்னி மண்ணில்! ஒடித்து ஒடித்து ஒடித்து தமிழரின் கதையை முடித்துவிட்டோம் – என்று எண்ணிய புத்தனின் பேரர்களுக்கு ‘ஒடிக்க ஒடிக்க ஒடிக்க மீண்டும் வளருவோம்’ என்று பாடம் நடத்தியிருக்கிறார்கள் எமது உறவுகள்.

அரசு இயந்திரத்தின் தலைவராக – முதலமைச்சராக – ஒரு நிர்வாகியாகத் தான் ஈழத்தில் கால்பதித்தார் விக்னேஸ்வரன். ‘யாழ் பேரணியின் மகத்தான வெற்றி விக்னேஸ்வரன் என்கிற நீதிபதியை அசைக்கமுடியாத அரசியல் தலைமையாக மாற்றிவிட்டது’ என்று இப்போது பலரும் எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அது மட்டுமே உண்மையில்லை.

எந்த மக்கள் தலைவனும் 24 மணி நேரத்தில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ச்சியான உறுதியான வெளிப்படையான செயல்பாடும் சுயநலமும் தடுமாற்றமும் இல்லாத தெளிவான போக்கும் தான் சிறிது சிறிதாக ஒரு தலைவனைச் செதுக்குகின்றன. ஒரு மக்கள் தலைவராக விக்னேஸ்வரன் உருவெடுத்திருப்பது இப்படித்தான்!

பௌத்த சிங்களப் பேரினவாதிகளால் நசுக்கப்பட்ட எமது தாயக உறவுகள் தாங்கள் நம்பிய தமிழர் தலைவர்களும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தபோதே ஒரு நம்பகமான தலைமைக்கான தேடல் தொடங்கிவிட்டது. நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவது எப்படி – என்கிற விக்னேஸ்வரனின் தேடலும் அதேநேரத்தில்தான் தொடங்கியிருந்தது. ஒரு மக்கள் சக்தியும் அவர்களை வழிநடத்தத் தகுந்த ஒரு தலைவனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதற்கு ஒரே நேர்க்கோட்டில் அமைந்துவிட்ட இந்த பரஸ்பரத் தேடல்கள்தான் காரணம்.

விக்னேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணியை நீர்த்துப்போக வைக்கும் உள்ளடி வேலைகளை சம்மந்தரின் சகபாடிகள் சாமர்த்தியமாக மேற்கொண்டது ஊரறிந்த ரகசியம். அதையெல்லாம் மீறி பேரணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை அறிந்த கணத்திலிருந்தே ‘சம்மந்தர் சொன்னதைத்தான் விக்னேஸ்வரனும் சொல்கிறார்’ – என்கிற மோசடிப் பிரச்சாரம் தொடங்கிவிட்டது.

பேரணி ‘ஓரளவே’ வெற்றி பெற்றிருந்தது என்று வையுங்கள்…. அந்த வெற்றியை இருட்டடிப்பு செய்யும் வேலையில் சமந்தகர்கள் மிக எளிதாக வெற்றி பெற்றிருப்பார்கள். எதிர்பார்த்ததைக் காட்டிலும் மாபெரும் மக்கள் பேரணியாக அது அமைந்தபிறகு அதை மூடி மறைக்க முடியவில்லை எவராலும்! நெருப்பை எப்படிப் பொட்டலம் கட்டமுடியும்?

எழுக தமிழ் – வெற்றியை மறைக்க முடியாத நிலையில் ‘சம்மந்தர் சொன்னதைத்தான் விக்னேஸ்வரன் சொல்கிறார்’ என்று ‘ராயல்டி’ கோரி ஒப்பாரி வைப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை சமந்தகர்களைச் சுமந்தவர்களால்! இது தங்கள் முகத்தில் பூசப்பட்டிருக்கும் கரியைத் துடைக்க தலைவர் பெருமக்கள் மேற்கொண்டிருக்கிற பரிதாப முயற்சி.

‘இரண்டு பேரின் கோரிக்கையும் வேறு வேறல்ல…. சம்மந்தர் மிதவாதி விக்னேஸ்வரன் தீவிரவாதி…. இதுதான் வித்தியாசம்’ – என்கிற வாதம் வழிசல் வாதம் மட்டுமில்லை சர்வநிச்சயமாக விதண்டாவாதம்.

எழுக தமிழ் – பேரணியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக இருந்தது விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கை மட்டுமே இல்லை. எதைப் பேசாமல் சம்மந்தனும் சகபாடிகளும் பதுங்குகிறார்களோ அதைப் பேச விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் பேரவையும் துணிந்ததுதான் இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணம்.

‘ஈழத்தில் நடந்தது சந்தேகத்துக்கிடமின்றி இனப்படுகொலை அந்தத் தமிழினப்படுகொலைக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை ஒன்றே வழி’ என்று விக்னேஸ்வரனும் அவரது தோழர்களும் உறுதிபடக் கூறுகின்றனர். சம்மந்தன் கோஷ்டி இந்த விஷயத்தைப் பூசி மெழுகிப் புண்ணாக்காக்கப் பார்க்கிறது. இந்த அடிப்படை வேறுபாடுதான் ‘எழுக தமிழ்’ வெற்றியின் அஸ்திவாரம்.

விக்னேஸ்வரன் இந்த விஷயத்தை வெறுமனே மேடை அரசியலாக்கிக் குளிர் காய முயலவில்லை. விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கு நீதி பெற்றே ஆகவேண்டும் – என்கிற அவரது ஓர்மம் ஒரு நேர்மையான நீதிபதிக்கு இருக்கிற நியாயமான உணர்வை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் அதை ஒரு வலுவான தீர்மானமாக வடமாகாண சபையில் நிறைவேற்றியதுடன் சர்வதேச நீதி கிடைப்பதற்கான வழிவகைகளையும் தெள்ளத்தெளிவாக அவரால் விளக்க முடிந்தது. இன்றுவரை அந்த அரிதினும் அரிதான தீர்மானத்தை வழிமொழியக் கூட வாய்திறக்கவில்லை சமந்தகர்கள்.

சொந்த மக்களுக்கு நீதிகேட்ட ஒரு மக்கள் முதல்வரைப் பார்த்து ‘இனப்படுகொலையென்று யாரைக் கேட்டு தீர்மானம் போட்டாய்’ என்று நக்கலடித்தார்கள் சில நயவஞ்சகர்கள். சம்மந்தரின் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளிருந்து சத்தம்போட்ட அந்த சட்டத் தந்திரிகள் மந்திரிகள் ஆவதற்கான வாய்ப்பெல்லாம் கூட இருந்தது. யாழ் பேரணிக்குப் பிறகு பேட்டரி அகற்றப்பட்ட எந்திரன் மாதிரி கிடக்கிறார்கள் அவர்கள். அவர்களது துரோகம்தான் விக்னேஸ்வரனின் வெற்றியை உறுதிசெய்த கூடுதல் காரணி.

விக்னேஸ்வரன் தீவிரவாதத்தைத் தூண்டுகிறார் – என்று பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறது சிங்களத் தரப்பு – அதிலும் குறிப்பாக ‘சிங்கலே’ தரப்பு. இப்படியெல்லாம் பழிசுமத்துவது பேரினவாதத்தின் கோர முகங்களில் மிக மிகப் பழமையானது. பௌத்த சிங்கள வெறியர்களின் பல்லாண்டுக்கால பம்மாத்து. அதே வேலையில் தமிழர் தலைவர்களும் ஈடுபடுவது எந்த ஊர் நியாயம்?

அரசியலில் நுழைந்த புதிதிலேயே வல்வெட்டித்துறையில் நின்று வாக்கு சேகரித்தபோது ‘ஒரு மாவீரனின் மண்ணில் நின்று பேசுகிறேன்’ என்று பெருமிதம் பொங்க ஒளிக்காமல் மறைக்காமல் வெளிப்படையாக உண்மையை அறிவித்தவர் விக்னேஸ்வரன். இன்று அவரை விமர்சிக்கும் சம்மந்தரின் தோழர்கள் அப்போது ஹியரிங் எய்டைக் கழற்றி வைத்திருந்தார்களா என்ன?

‘எங்கள் இளைஞர்கள் மீது போர் திணிக்கப்பட்டது…. சிங்களத் தலைமைகளின் இனவெறிப் போக்கும் காலங்காலமாய்த் தொடரும் தமிழினப் படுகொலைகளும் தான் எமது இளைஞர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்தது’ என்கிற வரலாற்று உண்மையை பகிரங்கமாகவே பதிவு செய்து வருகிறார் விக்னேஸ்வரன். ‘இனப்படுகொலைக்கு நீதி மறுக்கப்பட்டால் நல்லிணக்கம் சாத்தியமேயில்லை’ என்கிற யதார்த்தத்தைத் துணிவுடன் எடுத்துச் சொல்கிறார். இந்த உண்மைகளைப் பேச அஞ்சுகிற மரப்பாச்சி பொம்மைகளாக தமிழர் தலைமைகள் மாறிவிட்ட பிறகு மாற்றுத் தலைமையாக விக்னேஸ்வரன் உருவெடுத்திருப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

சிங்கள இனத்தின் மீது துவேஷத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் விக்னேஸ்வரன் இறங்கவில்லை. இந்த விஷயத்தில் பிரபாகரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இருக்கிற ஒற்றுமை வியக்க வைக்கிறது. அப்பாவிச் சிங்கள மக்களை ஒருபோதும் எதிரிகளாகக் கருதியதில்லை இருவரும்!

கொன்று குவிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு நீதிகேட்பதும் சொந்த இனத்தின் அடையாளங்கள் – பண்பாடு – மண் – மொழி ஆகியவற்றை மீட்பதும்தான் பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. விக்னேஸ்வரனுக்கும் இந்த நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் இல்லை. இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் அவர். இந்த உண்மையான நோக்கத்தை உணரத் தவறிய இது உரிமைக்கான குரல் என்பதை உணர்த்தத் தவறிய தமிழ்ப் பெருந்தலைகளுக்கு விக்னேஸ்வரன் மீது கொலைவெறியோடு பாய என்ன தகுதி இருக்கிறது?

யாழ் பேரணியில் விக்னேஸ்வரனுடன் இணைந்து நின்ற தமிழ் மக்கள் பெருந்திரளைப் பார்த்து போக்கிரி பிக்குகளும் பௌத்த சிங்கள வெறியர்களும் கடுப்பாகியிருப்பது ஏன் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவாளிகளைக் கூண்டிலேற்று – என்று பாதிக்கப்பட்ட மக்கள் உரக்க முழங்குவதை குற்றமிழைத்தவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்! அதனால் அதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டியதேயில்லை.

‘இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதன்மூலம் அரசியல் நடத்த விக்னேஸ்வரன் முயல்கிறார். அது அவருக்கே ஆபத்தாக அமையக்கூடும். அமிர்தலிங்கத்துக்கு அதுதான் நடந்தது’ என்கிற சரத் பொன்சேகாவின் மிரட்டலும் நாம் எதிர்பாராததல்ல! ஈவிரக்கமற்ற ஒரு போர்க்குற்றவாளி வேறெப்படி பேசமுடியும்?

ஒன்றரை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவிட்டு ‘ஒரு புல் பூண்டுக்குக் கூட கெடுதல் செய்யவில்லை’ என்று மகிந்த ராஜபக்ச மாதிரியே பேசுகிற இன்னொரு கள்ளப் புத்தன் – பொன்சேகா. நீதி கேட்கிற விக்னேஸ்வரனை மிரட்ட இப்படியான மறைமுக அச்சுறுத்தலுடன் நின்றுவிடாமல் நேரடி நடவடிக்கையில் கூட பொன்சேகா இறங்கலாம். இவர்களுக்கு லசந்த விக்கிரமதுங்கவும் விக்னேஸ்வரனும் வேறு வேறா என்ன!

இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி படிப்படியாக நாம் நகர்கிறோம். இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் விக்னேஸ்வரன் என்கிற அறிவாயுதத்தின் மீது ஒரு துரும்புகூட பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. எதையாவது செய்து தொலைத்துவிட்டு அந்தப் பழியைப் புலிகள் மீது போடுகிற அராஜகத் தந்திரத்தைத்தான் ‘ராஜதந்திரம்’ என்று இன்றுவரை சொல்லித் திரிகிறது இலங்கை. எனவே இந்த விஷயத்தில் சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

கொடூரமான வழிகளில் ஒடுக்கப்பட்ட பிறகும் விடுதலை நெருப்பை அடைகாக்கிற எமது தாயக மக்கள் விக்னேஸ்வரன் என்கிற பொக்கிஷத்தைக் காக்கிற கடமையிலிருந்து மட்டும் விலகி விடுவார்களா என்ன? எமது உறவுகள் மீது அழுத்தமான நம்பிக்கை இருந்தாலும் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்பதாலேயே சொல்கிறேன் இதை!

இந்த இனத்தில் பிறந்த அறிவாளிகள் பலரும் காலப்போக்கில் அயோக்கிய அறிவாளிகளாக மாறிவிடுவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த விஷயத்தில் நம்மை வியக்க வைக்கிற ஓர் அரிய மனிதராகவே விக்னேஸ்வரன் இருக்கிறார். ‘எழுக தமிழ்’ வெற்றியால் இறுமார்ந்து இருந்துவிடாமல் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை விரிவுபடுத்தக் கிடைத்த வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

‘இனப்படுகொலையின்போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்பதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று ‘எஜமானர்கள்’ பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரகடனம் செய்கிற விக்னேஸ்வரனின் குரல்தான் வன்னி மண்ணின் நிஜமான உணர்வை எதிரொலிக்கிறது. அதனால்தான் கொழும்பில் வந்து இறங்கிய கையோடு யாழ்ப்பாணம் வந்துவிடுகிறார்கள் சர்வதேசத் தலைவர்கள். அந்த வகையில் இந்த வாரம் விக்னேஸ்வரனைச் சந்தித்திருக்கிறார் சுவிட்சர்லாந்து அமைச்சரான திருமதி.சிமோனிட்டா.

‘கடந்த ஆட்சியில் காணப்பட்ட நிலைமைகள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்தால் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம்’ என்கிற கசப்பான உண்மையை சுவிஸ் அமைச்சரிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் விக்னேஸ்வரன். இதைவிடத் தெளிவாக சர்வதேசத்துக்கு வேறெவரால் செய்தி சொல்ல முடியும்?

யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசுவின் (சமஷ்டியா தனிநாடா – எழுதிய அதே திருநாவுக்கரசர்) நூல் வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் கலந்துகொள்ள இயலாத நிலையில் அவரது அதிகாரபூர்வ உரை அங்கே வாசிக்கப்பட்டிருக்கிறது. அந்த உரை – சற்றேறக்குறைய ஒரு சாசனம்.

‘இரண்டாவது உலகப்போரில் அழிக்கப்பட்ட ஜப்பான் பெரும் போராட்டத்துக்குப் பிறகு இரண்டாவது உலகப் பொருளாதார வல்லரசு ஆனது. ஐரோப்பாவில் அழிக்கப்பட்ட யூத இனம் பாரிய இனப்படுகொலைக்குப் பின்னும் புதிய அரசாக உருவெடுத்தது. ஹிட்லர் செய்த படுகொலைகள் யூத சமூகத்துக்கு விடுதலை உணர்வை ஊட்டியதைப் போன்று தமிழ் மக்கள் தமது நிலையை உணர முள்ளிவாய்க்கால் துயரங்கள் வழிவகுக்க வேண்டும்….. கற்ற பாடங்கள் மூலம்தான் வரலாற்றைப் படைக்க முடியும். அதுவரை இடர்களைத் தாங்க நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்பது விக்னேஸ்வரனின் வேண்டுகோள். ஒரு செயற்கையான வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ தமிழினம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான தெள்ளத்தெளிவான நிகழ்ச்சி நிரல் இது.

‘தமிழினத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தால் இனவாதம் பேசுகிறோம் சிங்கள மக்களைச் சினமடையச் செய்கிறோம் என்கிறார்கள்….! எமது மக்களை அடக்கி ஆளுகிற முயற்சிகளைக் கண்டும் காணாதது போல் இருக்கச் சொல்கிறார்களா’ என்கிற அறச்சீற்றமும் விக்னேஸ்வரனின் உரையில் இருந்தது.

விக்னேஸ்வரனிடம் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை. அவர் வெளிப்படையாக இயங்குகிறார் வெளிப்படையாகப் பேசுகிறார் அறிவோடும் துணிவோடும் நீதி கேட்கிறார். அவருடன் எமது மக்கள் இணைந்திருப்பது இயல்பானது.

ஒரு பேரழிவுக்குப் பிறகு எங்கள் தாயக மக்கள் ஓரணியில் திரண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விக்னேஸ்வரன் போன்ற ஒரு நம்பகமான தலைமை கிடைத்திருக்கிறது. அந்தத் தலைமையின் இலக்குகள் தெளிவானவையாக இருக்கின்றன. விடியலை நோக்கிய இப்படியொரு சூழலை ஏழே ஆண்டுகளில் ஏற்படுத்தியதற்காக விக்னேஸ்வரனுக்கும் எமது தாயக உறவுகளுக்கும் மட்டுமின்றி இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வேள்வியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட எமது புலம்பெயர் உறவுகளுக்கும் – அதிலும் குறிப்பாக புலம்பெயர் இளையோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் –
என்கிற வள்ளுவத்தின் வழியில் விக்னேஸ்வரன் யாரென அறிந்து தெளிந்து அந்த மனிதரை வலுப்படுத்தியிருப்பவர்கள் அவர்கள் தானே!