ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்!

699 0

201609050236193700_teachers-day-greeting-political-party-leaders_secvpfமாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 06ம் நாளை ‘ஆசிரியர் தினமாக’ இலங்கையில் கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றிம் ஈழத்து ஆசிரியர்களை பற்றியும் விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தினமானது முதன் முதலில் இந்தியாவிலேயே கொண்டாடப்பட்டது. தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது . பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

‘ஆசிரியர் தின’ நன்னாளில் பாடசாலைகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர். மேலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே விளையாட்டு போட்டிகளும் இடம்பெறும்.

ஆனால் இன்று ஈழத்தில் நடப்பதோ வேறு அதுவும் யாழ் மாவட்டத்தில் தலைகீழாக காணப்படுகிறது. மாணவர்கள் ஆசிரியர்களை தெய்வமாக மதித்தகாலம் போய் மிதிக்கின்ற காலமாக காணப்படுகின்றது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்தே இருக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தவறு செய்யும்போது அவர்களை தண்டிக்க ஆசிரியர்கள் பயப்பிடுகின்றனர். அண்மையில் யாழ் பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரை கட்டையால் தலையில்தாக்கியதை அறிந்து இருப்பீர்கள்.

அதைவிட ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளைகளைப் போல் பார்க்காமல் காம உணர்வோடு அவர்களை அண்டி அவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதையும் நாம் அறிந்ததே. கல்லூரியில் வேலைசெய்யும் சாதாரண தொழிலாளியில் இருந்து அதிபர்வரையில் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரளிக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்குகூட அனுப்புவதற்கு பயப்பிடவேண்டியுள்ளது. இலங்கை முழுவதும் கடந்த வருடம் மட்டும் பத்தாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது. எதாவது ஒரு முறைப்பாட்டுப் பிரிவில் பதியப்பட்டது எண்ணிக்கையே பத்தாயிரம் மானத்திற்கு பயந்து சிறவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பதியப்படாதது எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுப் கொள்ளுங்கள்.

மேலும் அண்மையில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தகாத வார்தைகளால் தங்களை திட்டியதாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தினார். ஆனால் ஆசிரியர்களோ தாங்கள் மாணவர்களை அடிக்கவில்லை மாணவர்களே தம்மை திட்டியதாகவும் தங்களை மாணவர்கள் மதிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். உண்மை எதுவாக இருந்தாலும் மாணவர்களுக்கும் ஆசிரயர்களுக்கும் புரிந்துணர்வு இல்லை என்பதே உண்மை.

இவ்வாறான பாடசாலைகளில் ஆசிரியர் தினம் முழுமனதோடு கொண்டாடப்படுமா? வெறுமனே சம்பிரதாயமாகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் என்பது எனது கணிப்பு. சில மாணவர்களும் ஆசிரியர்களும் செய்த தவறுகளால் ஒட்டுமொத்த மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் கரிபூசப்படுகின்றன.

மேலும் ஆசிரியர்களை எரிச்சலுட்டும் வகையிலும் நீதிமன்றத் தீர்புகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் மாணவரை கண்டித்தால் நீதீமண்றம் ஆசிரியர்களை தண்டிக்கிறது. அண்மைக்காலமாக ஆசிரியர்கள் வேட்டையாடப் படுகிறார்கள். ஒரு ஆசான் தன் சீடனை கண்டிப்பது அவனை நல்வழிப்படுத்தவே, ஆனால் தற்போது நீதிமன்றங்கள் அதனைத்தடுக்கின்றன. “அடியாத மாடு படியாது” என்று எம் முன்னோர்கள் அன்றே கணித்துவிட்டனர்.

எமது இளம் சமுதாயம் திசைமாறுகிறது அல்லது திட்டமிடப்பட்டு திசைமாற்றப்படுகிறது. யாழ் நகரை போதைப்பொருள் அலங்கரிக்கிறது, இவ்வாறு இருக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்காது விட்டால் எங்கே எமது இளம் சமுதாயம் செல்லப்போகிறது. அண்மைக் காலங்களில் பாடசாலைகளுக்கு அருகில் வைத்து போதைப்பொருள் தொடர்சியாக கைப்பற்றப்படுகிறது. சில இடங்களில் பாடசாலை மாணவர்கள் கூட போதைப்பொருள் முகவர்களாக செயற்படுகின்றனர். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து பாடசாலை நேரத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இந்த வருடத்தில் இருந்தாவது பழையவற்றை மறந்து ஆசிரியர்களை மதிப்போம். அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குவோம். ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனவே இனிவரும் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி எமது இனத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வழிவகுக்குமாறு சிறிய கோரிக்கையையும் ஆசிரியர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.