சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம்

75 0

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது.

ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது.  அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த நான்கு வருடங்களும் கழிந்து போயிருக்கின்றன.

ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற பற்றுறுதி அரசாங்கத்திடம் இருந்திருக்குமேயானால், பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை உரிய முறையில் அமைத்து அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த முயற்சிகள் இதயசுத்தியுடன் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக காலந் தாழ்த்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த சிறு சிறு சலசலப்புக்களையும்கூட எதிர்ப்புகளாகத் திரித்துக்காட்டி, நிலைமாறு கால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்குவதில் தாமதப்படுத்துவதிலும், ஒப்புக்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலுமே குறியாக இருந்து செயற்பட்டு வந்துள்ளது.

பொறுப்பு கூறும் விடயத்தில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்பீடு வழங்குதல், மீண்டும் நிகழாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

முதல் நடவடிக்கையாக உண்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒரு முக்கிய பொறிமுறையாகவே ஓஎம்பி என்ற காணாமல் போனோருக்கான அலுவலகத்தை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை உருவாக்குவதில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது நிலைப்பாடு.

ஆனால் அந்த பொறிமுறை உருவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களாகிய தங்களுடைய கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை. தங்களுடைய பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தி, இணக்கப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக நடத்தப்படுகின்ற விசாரணைகளின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டையே ஓஎம்பி என்ற காணாமல் போனோருக்கான அலுவலகப் பொறிமுறையில் அரசு கொண்டிருக்கின்றது.

ஓஎம்பி விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும்கூட, அந்த விசாரணைகளின் அடிப்படையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் அந்த அலுவலகத்திற்கு வழங்கப்படவில்லை.

வலிந்து ஆட்களைக் காணாமல் ஆக்குவதென்பது, சாதாரண சட்டங்களின் கீழ் பாரதூரமான தண்டனைக்குரிய குற்றமாகும். யுத்த மோதல்களின்போதும், யுத்தச் சூழலிலும், அடாவடியாக ஆட்கள் கைது செய்யப்பட்டதும், மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதைத் தடுப்பதற்கும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்பான விளைவுகளை உணர்தும் வகையிலுமாகவே ஆட்கள் கடத்தப்பட்டார்கள். காணாமல் ஆக்கச் செய்யப்பட்டார்கள்.

யுத்த மோதல்கள் தீவிரமடைவதற்கு முன்னர், இலக்கத் தகடில்லாத வெள்ளை நிற வான்கள் ஆட்கடத்தல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டபோது, வெள்ளை வேன் என்பது பயங்கரத்தின் அடையாளமாகத் திகழ்ந்ததை மறக்க முடியாது. அவ்வாறு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை. அச்சுறுத்தலாகவும், அச்சுறுத்தி அடக்கி ஒடுக்குவதற்காகவும் வெள்ளை வான் கடத்தல் நடவடிக்கையை படையினர் ஓர் உத்தியாகப் பயன்படுத்தியிருந்தனர்.

வெள்ளை வான் கடத்தல் படிப்படியாக முன்னேற்றமடைந்து கைது செய்யப்பட்டவர்களையும், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையும், விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கச் செய்யும் கைங்கரியமாக மாறியது. ஆந்த உச்ச கட்ட நிலையில் காணாமல் போனவர்களுக்காகக் குரல் எழுப்பி, ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களே வளர்ச்சியடைந்து இன்று வடக்கிலும் கிழக்கிலும் கடையடைப்புடன் கூடிய எதிர்ப்பு நடவடிக்கையாக உச்சம் பெற்றிருக்கின்றன.

இறுதி சந்தர்ப்பமா. . . . . . . . . . ?

யுத்த நெறிமுறை பிறழ்வுக்கும், மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐநா வலியுறுத்தி, நிறைவேற்றிய பிரேரணைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அழுத்தம் கடந்த பத்து வருடங்களாகத் தொடர்கின்றது. முதலில் ஒன்றரை வருடமும், அதனையடுத்து இரண்டு வருடங்களும் அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது. இரண்டாம் முறையாக வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முற்றுப் பெற்றுவிட்டது. ஆனால் பொறுப்பு கூறுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. இதனால், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்படும், நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் இருந்து படிப்படியாக மறைந்து வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுவதற்கான புதிய பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான முயற்சிகள் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நீர்த்துப் போகச்செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்ற போதிலும் பொறுப்பு கூறும் விடயத்தில் போதிய முன்னேற்றத்தைக் காட்டத் தவறியுள்ள அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையோ, ஐநாவோ அல்லது சர்வதேசமோ எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது அரசாங்கத்திற்கு சாதகமான ஒரு போக்கில் ஐநாவும் சர்வதேசமும் சென்றுகொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகத்தையே பாதிக்கப்பட்ட மக்களுடைய மனங்களில் ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையையும், பின்னர் கலப்பு விசாரணை முறையையும் மறுதலித்து, உள்ளுர் மட்டத்திலான விசாரணைகளே போதுமானவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது, பொறுப்பு கூறுவதாகப் போக்குக்காட்டி கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை, போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தாக சந்தேகிக்கப்படுகின்ற பொறுப்பான பதவிகளை வகித்த முக்கியஸ்தர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதையும், புதிய புதிய பொறுப்புள்ள பதவிகளில் அவர்களை நியமிப்பதிலும் அரசு கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றது.

இராணுவத்தினரை எந்தக் காரணத்தைக் கொண்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தமாட்டோம் என்று சூளுரைத்துள்ள அரசாங்கம் மனித உரிமை மீறல்களிலும் போர்க்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள் அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களையே மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று எடுத்துரைப்பதற்காக ஜெனிவாவுக்கு தனது பிரதிநிதிகளாக அரைசாங்கம் துணிவோடு அனுப்பி வைத்துள்ளதையும் காண முடிகின்றது.

முன்னர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவில் பதிலளிப்பதற்காக அனுப்பி வைத்திருந்த அரசாங்கம் இம்முறை மனித உரிமை மீறல்களே இடம்பெறவில்லை என்று முழுப் பூசணியை சோற்றி; மறைத்திருந்த அமைச்சர் ஒருவரை இம்முறை ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்ற வல்ல பொறுப்புவாய்ந்த அதிகாரிகளையும் முக்கியஸ்தர்களையும் அனுப்புவதற்குப் பதிலாக மனித உரிமை மீறல்களே இடம்பெறவில்லை என்று ஐநா மனித உரிமைப் பேரவையில் கலந்து கொண்டிருந்தவர்கள் முகம் சுளிக்கத்தக்க வகையில் கருத்து வெளியிட்டிருந்த ஒருவரை இம்முறை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கபடத்தனம்

இந்த நடவடிக்கை பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் அரசாங்கத்தின் கொண்டுள்ள கபடத்தன்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மனித உரிமைகள் பேரவை கூடி இலங்கை விவகாரம் குறித்து ஆய்வு செய்கின்ற சந்தர்ப்பத்தில், கடந்த காலத்தைத் தோண்டி எடுத்து, பழைய காயங்களை மீண்டும் கிளற வேண்டிய அவசியமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்தியாளர்களைத் தமது இருப்பிடத்தில் சந்தித்தபோது தெரிவித்தள்ளமை இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

பொறுப்பு கூறும் விடயத்தில் நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு பொறுப்பு கூறுவதற்காக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மீளாய்வு செய்ய வேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவையில் கோரவுள்ளதாக இந்த செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கை ஐநா மனித உரிமைப் பேரவையிடம் முறைப்படி முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து வருடங்களாகின்றன. நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த காலத்தைத் தோண்டியெடுத்து, பழைய காயங்களைக் கிளற வேண்டாம் என கோரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தை மறந்து சமாதானத்தில் வாழ்வதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வோம் என ஐநா மனித உரிமைப் பேரவையிடம் தான் கூறவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்று மனித உரிமை அமைப்புக்களையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், மனித உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பு கூறும் என்று நம்பியிருந்தவர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.

சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து, அந்த மக்களின் ஆதரவுடன்  ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறுபான்மையினருக்கு எதிராகக் கடும் போக்கில் நகரத் தொடங்கியுள்ளார். இது பாதிக்கப்பட்ட மக்களுடைய மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டின் நிலைமை குறித்து அவர்களைக் கவலையடையச் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், தங்களுடைய இருப்புக்கும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

யுத்தத்தில் அடைந்த வெற்றியைத் தனது அரசியல் முதலீடாக்கி அதிகார பலத்தையும், ஆட்சி உரிமையையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியில் இருந்து பிரிந்த மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராக உயிர் அச்சறுத்தலுக்கு மத்தியில் போட்டியிட்டிருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த நான்கு வருடங்களுக்குள்ளேயே மீண்டும் மகிந்த ராஜபக்சவின் கொள்கை வழியில் காலடி எடுத்து வைத்து முன்னேறத் தொடங்கியிருப்பதன் மூலம் சந்தர்ப்பவாத அரசியல் போக்கில் பயணம் செய்கின்ற பேரின அரசியல் தலைவர்களின் வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இடம்பெற்றிருப்பதையே காட்டுகின்றது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் காலத்தில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர்களுக்கு எதிரான அரசியல் பாதையில் நடையைக் கட்டுவதே நாட்டின் அரசியல் வரலாறாக உள்ளது. அந்த வரலாற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பங்கிற்குப் புதுப்பித்துள்ளார் என்றே கருத வேண்டியிருக்கின்றது.

ஜெனிவாவுக்கான கடும்போக்குக் குழு

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை நியாயப்படுத்தி நிலைநிறுத்துவதற்காக மூன்;று பிரதிநிதிகளைக் கொண்ட விசேட குழு ஒன்றை ஜெனிவாவுக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஜெனிவா செல்லும் அரசாங்க குழு மீது நம்பிக்கை இழந்துள்ள காரணத்திலேதான், ஜனாதிபதி தனது பிரதிநிதிகளாக மூன்று பேர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

பிழையான தகவல்களின் அடிப்படையிலும், வாய்மொழி விபரங்களின் ஆதாரத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலும், 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கையை வெளியேறச் செய்வதற்கான வழிவகைகளை ஜனாதிபதியின் சார்பில் செல்லும் இந்தக் குழு தேடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டு 30-1 தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்றும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறத்தில் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் ஐநாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்தவருமாகிய மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் விசேட குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவே இல்லையென்றும், எவருமே காணாமல் போகவில்லை என்றும் முற்று முழுதாக மறுத்துரைத்;திருந்த முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கையின் சார்பில் கலந்து கொண்டால், ஐநா மனித உரிமைகள் பேரவையில் கலந்து உரையாடல்களில் ஈடுபடுபவர்கள் எந்த அளவுக்கு இவருடைய கருத்துக்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்று, ஐரீஜேபி என்ற உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்ற கடும்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவருமாகிய மகிந்த சமரசிங்கவை ஐநா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கின்ற அரசாங்கத்தின் நோக்கம் குறித்து அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க போன்றவர்களை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கான பிரதிநிதிகளாக நியமிப்பது என்பது, பொறுப்பு கூறுகின்ற முழு கைங்கரியத்தையும் கீழறுக்கின்ற அல்லது வலிதற்றாக்குகின்ற ஒரு முயற்சியாகும் என்று உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன, போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி ஏற்றுக்கொள்வதன் அடையாளமாகவே காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுகின்ற நடவடிக்கையின் ஓர் அம்சமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.

அதேவேளை, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் பணியில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று மறுத்துரைக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மகிந்த சமரசிங்கவை நியமித்ததன் மூலம், அந்த அலுவலகத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு அரசு கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்றும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அரசாங்க தரப்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் அரசு முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டு அதனைக் குழப்பியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின்; அரசியல் தலைவர்களும், அவர்களின் நலன்களில் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்க வேண்டிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஐநா மனித உரிமைப் பேரiயில் பங்குகொள்கின்ற அமைப்புக்களின் ஊடாக உண்மையான நிலைமைகளை ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கத் தவறியிருக்கின்றனர் என்று சர்வதேச செயற்பாட்டாளர்களும் இராஜதந்திரிகளும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இது விடயத்தில் திட்டமிடப்பட்ட ஓர் ஒழுங்கில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் நிலைமைகளைத் தெளிவுபடுத்தி கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்டுவதற்குப் பதிலாக அரசியல் செயற்பாட்டு நோக்கத்திலேயே நடவடிக்கைகள எடுக்கப்படுகின்றன என்பதையும் அவ்கள் சுட்டிக்காட்டியிருக்கின்hறார்கள்.

இத்தகைய பொறுப்பற்ற போக்கில் இருந்து விடுபடும் வரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கப் போவதில்லை.