வேப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.வழக்கம்போல் ராஜா கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தின் ஒரு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது போல் சத்தம் கேட்டது.
அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு சென்று பார்த்த போது 10 அடி ஆழத்துக்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பள்ளத்துக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து அந்த பகுதியில் தகவல் பரவியது. பொது மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து திடீர் பள்ளத்தை வியப்புடன் பார்த்துச்சென்றனர்.
இது குறித்து ராஜா கூறும்போது, “எனது தோட்டத்தில் இதற்கு முன்பு பள்ளம் ஏற்பட்டதில்லை. கடந்த மாதம் 12-ந் தேதி வேப்பூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.தகவல் அறிந்த வேப்பூர் வருவாய் ஆய்வாளர் முருகன் விரைந்து வந்து பார்வையிட்டார்.

