பொருட்கள் மீது தடை – அமெரிக்கா மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு!

482 0

பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. மேலும் ஹூவாய் நிறுவனம் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இதற்கிடையில் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது.

அதனை தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை போட்டது.

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.