“இறந்த பயங்கரவாதிகளின் சடலத்தை எங்களிடம் காட்டுங்கள்” – உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பம்

267 0

இறந்த பயங்கரவாதிகளின் சடலத்தை எங்களிடம் காட்டுங்கள் என உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி நடத்திய தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்கு சென்று அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் அதிகமான பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. ஆனால் உறுதி செய்ய முடியவில்லை, சேதம் எதுவும் தென்படவில்லை என சர்வதேச மீடியாக்கள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகளும் தாக்குதலில் பயங்கரவாதிகள் சாவு தொடர்பாக ஆவணங்களை கேட்கிறது.

இந்நிலையில் இறந்த  பயங்கரவாதிகளின் சடலத்தை எங்களிடம் காட்டுங்கள் என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பம் வலியுறுத்தியுள்ளது. 


40 சிஆர்பிஎப் வீரர்களில் இரு வீரர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் ராம் வாகீல் ஆவர். இருவரின் குடும்பத்தாரும் தாக்குதலில் நேரிட்ட பாதிப்பு தொடர்பாக ஆவணங்களை கேட்கிறார்கள்.


ராம் வாகீலின் சகோதரி ராம் ராக்‌ஷா பேசுகையில்,  “புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டதும் யாரோ உடனடியாக பொறுப்பு ஏற்கிறார்.  இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது என்பதில் தெளிவாக உள்ளேன். ஆனால் எங்கு நடந்தது? தெளிவான ஆதாரமாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் எந்த சேதமும் இல்லை என்று கூறுகிறது. எனவே, ஆதாரம் இல்லாவிட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.  


“என் சகோதரனின் படுகொலைக்கு பழிவாங்கப்பட்டது என்று தெரிந்தால்தான் அமைதியடைவோம், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்,” என கூறியுள்ளார். 


இதேபோன்று ராணுவ வீரர் பிரதீப் குமாரின் தாய் சுலேலதாவும் ஆதாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் பேசுகையில், “எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.  எதிரிதரப்பில் யாரும் இறந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. மறுபுறம் இறந்த உடல்கள் கிடையாது. உண்மையில் உறுதிசெய்யப்பட்ட செய்தி கிடையாது. நாங்கள் தொலைக்காட்சிகளில்தான் செய்தியை பார்க்கிறோம். பதிலடி தொடர்பாக எங்களுடைய வீட்டில் தெரிவிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் உயிரிழந்த சடங்களை பார்க்க வேண்டும்” என்றார்.