2009-ம் ஆண்டு ஐகோர்ட்டில் கலவரம்: வக்கீல்கள் 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்

292 0

2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்கள் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த போராட்டத்தின் போது, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் மீது போராட்டக்காரர்கள் சிலர் அழுகிய முட்டையை வீசி தாக்குதல் நடத்தினர். ஐகோர்ட்டுக்குள் நீதிபதிகளின் கண் எதிரே இந்த சம்பவம் நடந்ததால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயற்சித்தனர்.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. ஐகோர்ட்டுக்குள் ஆயுதப்படை போலீசார் உள்ளே நுழைந்து நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். இதில் நீதிபதிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால், சென்னை ஐகோர்ட்டு பல நாட்கள் இழுத்து மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முகோபாத் தியாயா தலைமையிலான முதல் அமர்வு, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்திய பின்னர், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீதும், 4 ஆயுதப்படை போலீசார் மீதும் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த புலன்விசாரணை பாரபட்சமாக உள்ளதாக கூறி, வக்கீல்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த தடை உத்தரவு கடந்த சில நாட்களுக்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி. சென்னை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வக்கீல்கள் அனைவரும் வருகிற 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.