ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் இன்று ஆலோசனை!

252 0

தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் நேற்று தி.மு.க. தலைவர்களை சந்தித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு அணிகளில் உள்ள கட்சிகள் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திட்ட மிடப்பட்டது.
இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் வந்தனர்.
இவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் வரவேற்று, கூட்டரங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுடன், தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, கன்னியாகுமரி, மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தி.மு.க. ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க விரும்புகிறது. அது எந்த தொகுதி என்பது பற்றி மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், தொகுதி பங்கீடு குறித்து அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச்செயலாளர்கள் சுப்பராயன், வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அவர்கள், நாகை, கோவை ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் ஜவாஹிருல்லா கூறும்போது, “முதல் கட்டமாக தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பேசினோம். தேர்தலில் எங்கள் நிலைப்பாடு என்ன? என்பது குறித்த கருத்துகளை தெரிவித்தோம். கொள்கையற்ற பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் நடைபெற உள்ளது” என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை தர வேண்டும் என்று அக்கட்சி தி.மு.க.விடம் கேட்டு உள்ளது.
கருணாநிதி இருந்த போது 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளையும், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகளையும் விடுதலை சிறுத்தைகள் பெற்றிருந்தது. இதில் 2014-ம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
கடந்த காலங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டது போலவே, இந்த முறையும் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. வுடன் இன்று (வெள்ளிக் கிழமை) பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த ம.தி.மு.க. சார்பில் பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் சே.செவந்தியப்பன், ஆட்சி மன்றக்குழு செயலாளர் செங்குட்டுவன், உயர்நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.
இந்த குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.